Skip to content

குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

குடி குடியைக் கெடுக்கும்

குடி குடியைக் கெடுக்கும்

 உங்களுடைய குடிப்பழக்கத்தை நினைத்து கவலைப்படுவதாக உங்களுடைய கணவனோ மனைவியோ சொல்லியிருக்கிறாரா? அப்படியென்றால், சில விஷயங்களை நீங்கள் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டுரையில்

 குடும்பத்தை சீரழிக்கும் குடி

 குடிப்பழக்கத்தால் இதய நோய், கல்லீரல் கரணை நோய், புற்றுநோய் போன்ற எல்லா விதமான நோய்களும் வரலாம். குடிப்பழக்கம் உங்கள் உடலை மட்டுமல்ல உங்கள் குடும்ப வாழ்க்கையையும் கெடுத்துவிடும். குடும்பத்தில் அடிதடி, பணப் பிரச்சினை, மணத்துணைக்கு துரோகம், விவாகரத்து போன்ற பிரச்சினைகளை கொண்டு வரும்.

 மதுபானத்தை அளவுக்கு மீறி குடித்தால், அது “பாம்பு போல் கடிக்கும். விரியன் பாம்பு போல விஷத்தை கக்கும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:32) அப்படியென்றால், நீங்கள் மதுபானத்துக்கு அடிமையாகிவிட்டீர்களா என்று எப்படி தெரிந்துகொள்ளலாம்?

 நீங்கள் குடிக்கு அடிமையாகிவிட்டீர்களா என எப்படித் தெரிந்துகொள்ளலாம்?

 இதற்கு பதில் தெரிந்துகொள்ள கீழே கொடுத்திருக்கும் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்:

  •   இவ்வளவுதான் குடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு வைத்துக்கொள்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா?

  •   இனி அடுத்து எப்போது குடிக்கலாம் என்பதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா?

  •   குடிப்பழக்கத்தால் உங்களுடைய வாழ்க்கையிலும் குடும்பத்திலும் பிரச்சினைகள் வந்தாலும் நீங்கள் குடிக்கிறீர்களா?

  •   குடியை நிறுத்த நினைக்கும்போது உங்களுக்கு நடுக்கம், எரிச்சல், தலைவலி எல்லாம் வருகிறதா?

  •   நீங்கள் குடிப்பதால் உங்களுக்கும் உங்களுடைய துணைக்கும் அடிக்கடி சண்டை வருகிறதா?

  •   முன்பு குடித்துக் கொண்டிருந்ததை விட இப்போது அதிகமாக குடிக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

  •   நீங்கள் திருட்டுத்தனமாக குடிக்கிறீர்களா அல்லது வீட்டிலோ வேலை செய்கிற இடத்திலோ மதுபானத்தை ஒளித்து வைக்கிறீர்களா?

 இதில் ஒரு கேள்விக்கோ பல கேள்விகளுக்கோ உங்கள் பதில் ‘ஆம்’ என்றால், குடிக்காமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். நீங்கள் குடிநோயாளி ஆகிவிட்டீர்கள் என்றும் சொல்லலாம்.

 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்

 உங்கள் குடிப்பழக்கத்தை நினைத்து கவலைப்படுவதாக உங்கள் துணை சொல்லியிருக்கிறாரா? ‘இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையே இல்ல’ என்று சொல்லியிருப்பீர்கள். நீங்கள் குடிப்பதற்கு சாக்குப்போக்கு கூட சொல்லியிருப்பீர்கள். உங்கள் துணை மேலேயோ, மற்றவர்கள் மேலேயோ பழிபோடுவதற்காக இப்படியெல்லாம் கூட சொல்லியிருக்கலாம்:

  •   “நீ என்னை நல்லா நடத்தியிருந்தா நான் ஏன் குடிக்கப்போறேன்.”

  •   “என் வேலையில் இருக்கிற ஸ்ட்ரெஸ் உனக்கும் இருந்தால் நீயும்தான் குடிப்ப.”

  •   “என்னை விட அதிகமாக குடிக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், நான் எல்லாம் ஒண்ணுமே இல்லை.”

 இப்படி எல்லாம் நீங்கள் சொல்லியிருந்தால், உங்கள் கல்யாண வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையை விட குடிக்க வேண்டும் என்ற ஆசைதான் உங்களுக்கு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தமாகாதா? அப்படியென்றால், எது உங்களுக்கு உண்மையிலேயே முக்கியம்?

 பைபிள் ஆலோசனை: “ஆனால், திருமணம் ஆனவன் தன்னுடைய மனைவிக்கு எப்படிப் பிரியமாக இருக்கலாம் என்று யோசித்து, . . . கவலைப்படுகிறான்.”​—1 கொரிந்தியர் 7:33.

‘குடிப்பழக்கம் எல்லாம் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை’ என்ற சுவற்றை இடித்து அதில் ஜன்னல் வைத்து பார்த்தால், உங்கள் துணையுடைய கவலையை உங்களால் தெளிவாக பார்க்க முடியும்

 நீங்கள் என்ன செய்யலாம்?

  •   உங்கள் துணையின் கவலையை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் துணை இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குகிற மாதிரி உங்களுக்கு தோன்றினால் கூட நீங்கள் ஏன் மாற்றங்கள் செய்யக் கூடாது? உங்கள் துணை இதை நினைத்து கவலைப்படுகிறார் என்று தெரிந்தும் ‘குடியை விடமாட்டேன்’ என்று நீங்கள் பிடிவாதமாக இருந்தால், நீங்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதற்கு அது ஒரு அறிகுறி.

     பைபிள் ஆலோசனை: “ஒவ்வொருவனும் தனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல், மற்றவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேட வேண்டும்.”​—1 கொரிந்தியர் 10:24.

  •   உண்மையை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். போரில் ஜெயிக்க வேண்டும் என்றால் எதிரியின் தந்திரங்களை ஒரு போர் வீரன் நன்றாக தெரிந்துவைத்திருக்க வேண்டும். அதே போல், குடிப்பழக்கம் என்ற எதிரியை நீங்கள் தோற்கடிக்க வேண்டுமென்றால், அது உண்மையிலேயே எப்படிப்பட்டது, அது எப்படி ஆட்களை தன்னுடைய வலையில் சிக்க வைக்கிறது என்பதை நீங்கள் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கும் மறுபடியும் அந்தப் பழக்கத்தில் விழுந்துவிடாமல் இருப்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

     பைபிள் ஆலோசனை: “உங்களுக்கு எதிராகப் போர் செய்துகொண்டிருக்கிற பாவ ஆசைகளிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.”​—1 பேதுரு 2:11.

  •   உதவி கேளுங்கள். குடிக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்காக மருத்துவமனைகள், மறுவாழ்வுத் திட்டங்கள், சிகிச்சை மையங்கள் போன்ற நிறைய மருத்துவ வசதிகள் இருக்கின்றன. நீங்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாவதற்கு வேறு என்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிப்பதற்கு ஒரு நல்ல நண்பரிடம் மனசு விட்டு பேசுங்கள். இந்தப் பழக்கத்தில் திரும்பவும் விழுந்துவிடுவீர்கள் என்று தோன்றினால், அந்த நண்பரிடம் உதவி கேளுங்கள்.

    மருத்துவர்களுடைய உதவியை எடுத்துக்கொள்ளுங்கள்

     பைபிள் ஆலோசனை: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”​—நீதிமொழிகள் 17:17.

 குடிப்பழக்கம் ஒரு சாதாரண பிரச்சினை கிடையாது. ஒரு சின்ன கட்டுரையை படித்த உடனேயே அது தீர்ந்து விடாது. அதோடு ‘நான் இனிமேல் அளவாக குடிக்கிறேன்’ என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். இந்த பழக்கத்தை விடுவதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது ரொம்பவே முக்கியம். ஏனென்றால், இது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்ப வாழ்க்கைக்கும் குழிவெட்டும்.

 அதிகம் தெரிந்துகொள்வதற்கு: குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்த ஒரு சிலர் அதிலிருந்து எப்படி வெளியே வந்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு கீழே இருக்கிற கட்டுரைகளை படித்து பாருங்கள்:

 இப்போதெல்லாம் நான் கொடூரமாக நடந்துகொள்வதில்லை

 என்னை நினைத்து இப்போது நான் கூனிக்குறுகுவது இல்லை

 தெருவே எனக்கு வீடானது

 ‘என்ன வாழ்க்கை இது?’ என்ற வீடியோவையும் பாருங்கள்