அர்மகெதோன் போர் என்றால் என்ன?
பைபிள் தரும் பதில்
இந்த உலகத்தில் நடக்கப்போகும் கடைசிப் போர்தான் அர்மகெதோன். இது மனித அரசாங்கங்களுக்கும் கடவுளுக்கும் நடக்கப்போகும் போர். இந்த அரசாங்கங்களும் சரி, இவற்றை ஆதரிக்கிறவர்களும் சரி, இன்றைக்கே கடவுளை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள், அவருக்குக் கீழ்ப்படிவது இல்லை. (சங்கீதம் 2:2) காலம்காலமாக நடந்துவரும் மனித ஆட்சிக்கு அர்மகெதோன் போர் முடிவுகட்டும்.—தானியேல் 2:44.
“அர்மகெதோன்” என்ற வார்த்தை பைபிளில் ஒரே ஒரு தடவை மட்டும்தான் வருகிறது. அது வெளிப்படுத்துதல் 16:16-ல் இருக்கிறது. ‘எபிரெய மொழியில் அர்மகெதோன் என்று அழைக்கப்படும் இடத்தில்’ ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போருக்காகப் பூமி முழுவதுமுள்ள ராஜாக்கள்’ கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 16:14.
அர்மகெதோனில் யார் போர் செய்வார்கள்? இயேசுவும் அவருடைய பரலோகப் படையும் சேர்ந்து கடவுளுடைய எதிரிகளோடு போர் செய்து அவர்களை ஒழித்துக்கட்டுவார்கள். (வெளிப்படுத்துதல் 19:11-16, 19-21) கடவுளை மதிக்காமல் அவரை எதிர்க்கிற எல்லாரும்தான் அந்த எதிரிகள்.—எசேக்கியேல் 39:7.
அர்மகெதோன் போர் மத்திய கிழக்கில் நடக்குமா? இல்லை. அது ஒரேவொரு இடத்தில் மட்டும் நடப்பதற்குப் பதிலாக உலகம் முழுவதும் நடக்கும்.—எரேமியா 25:32-34; எசேக்கியேல் 39:17-20.
அர்மகெதோன் என்ற வார்த்தை சிலசமயங்களில் “ஹர்-மெகிதோன்” என்றும் எழுதப்படுகிறது. இந்த எபிரெய வார்த்தைக்கு “மெகிதோ மலை” என்று அர்த்தம். அன்று இஸ்ரவேலில், மெகிதோ என்ற ஒரு நகரம் இருந்தது. அந்தப் பகுதியில் ரொம்ப முக்கியமான போர்கள் நடந்ததாக சரித்திரம் காட்டுகிறது. அவற்றில் சில போர்களைப் பற்றி பைபிளும் சொல்கிறது. (நியாயாதிபதிகள் 5:19, 20; 2 ராஜாக்கள் 9:27; 23:29) ஆனால், அர்மகெதோன் என்பது பழங்கால மெகிதோ பகுதியைக் குறிக்க முடியாது. ஏனென்றால், அங்கே எந்தப் பெரிய மலையும் இல்லை. அதோடு, அதற்குப் பக்கத்திலுள்ள யெஸ்ரயேல் பள்ளத்தாக்கு முழுவதையும் சேர்த்தால்கூட, கடவுளுடைய எதிரிகள் எல்லாரும் கூடிவருவதற்கு இடம் போதாது. அதனால் அர்மகெதோன் என்பது, உலகம் முழுவதும் இருக்கும் அரசியல் சக்திகள் கடவுளுடைய அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுதிரண்டு வரும் சூழ்நிலையைக் குறிக்கிறது.
அர்மகெதோன் போர் எப்படி இருக்கும்? கடவுள் தன்னுடைய சக்தியை எப்படிப் பயன்படுத்துவார் என்று நமக்குத் தெரியாது. ஆனால், முன்பு அவர் பயன்படுத்திய ஆயுதங்களையே அர்மகெதோனிலும் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதாவது, ஆலங்கட்டி, நிலநடுக்கம், பலத்த மழை, நெருப்பு, கந்தகம், மின்னல், நோய் போன்றவற்றை அவர் பயன்படுத்தலாம். (யோபு 38:22, 23; எசேக்கியேல் 38:19, 22; ஆபகூக் 3:10, 11; சகரியா 14:12) அர்மகெதோனில் அவருடைய எதிரிகளில் சிலராவது குழப்பத்தில் ஒருவரை ஒருவர் கொன்றுபோடலாம். ஆனாலும், கடவுள்தான் அவர்களுக்கு எதிராகப் போர் செய்கிறார் என்பதை அவர்கள் கடைசியில் புரிந்துகொள்வார்கள்.—எசேக்கியேல் 38:21, 23; சகரியா 14:13.
அர்மகெதோனில் உலகமே அழிந்துவிடுமா? இந்தப் பூமி ஒருபோதும் அழியாது. ஏனென்றால், மனிதர்கள் என்றென்றும் வாழ்வதற்காகத்தான் கடவுள் அதைப் படைத்திருக்கிறார். (சங்கீதம் 37:29; 96:10; பிரசங்கி 1:4) அர்மகெதோன் மனிதகுலத்தை அழிப்பதற்குப் பதிலாக அதைக் காப்பாற்றத்தான் போகிறது. எப்படி? கடவுளுக்குச் சேவை செய்கிற ‘திரள் கூட்டமான மக்களை’ அது காப்பாற்றும்.—வெளிப்படுத்துதல் 7:9, 14; சங்கீதம் 37:34.
பைபிளில் “உலகம்” என்ற வார்த்தை இந்தப் பூமியை மட்டும் குறிப்பதில்லை. கடவுளை எதிர்க்கும் பொல்லாத மக்கள் எல்லாரையும்கூட சிலசமயம் குறிக்கிறது. (1 யோவான் 2:15-17) இந்த அர்த்தத்தில்தான் அர்மகெதோன் போர் இந்த ‘உலகத்துக்கு முடிவு’ கொண்டுவரும்.—மத்தேயு 24:3, தமிழ் O.V. பைபிள்.
அர்மகெதோன் எப்போது நடக்கும்? ‘மிகுந்த உபத்திரவத்தின்’ முடிவில் அர்மகெதோன் நடக்கும். ஆனால், “அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது, பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:21, 36) அதேசமயத்தில், இயேசுவின் பிரசன்னத்தின்போது அர்மகெதோன் நடக்கும் என்று பைபிள் சொல்கிறது. மனித கண்களுக்குத் தெரியாத அவருடைய பிரசன்னம் 1914-ல் ஆரம்பித்தது.—மத்தேயு 24:37-39.