சாகும்போது என்ன நடக்கிறது?
பைபிள் தரும் பதில்
“உயிரோடு இருக்கிறவர்களுக்குத் தாங்கள் என்றாவது ஒருநாள் சாக வேண்டியிருக்கும் என்பது தெரியும். ஆனால், இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:5; சங்கீதம் 146:4) அதனால், சாகும்போது நாம் எங்குமே இல்லாமல்போகிறோம். இறந்த பிறகு நம்மால் எதையுமே யோசிக்கவோ, செய்யவோ, உணரவோ முடியாது.
“மண்ணுக்கே திரும்புவாய்”
சாகும்போது என்ன நடக்குமென்று முதல் மனிதனான ஆதாமிடம் கடவுள் சொன்னார். ஆதாம் கீழ்ப்படியாமல்போனதால், “நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்” என்று அவர் சொன்னார். (ஆதியாகமம் 3:19) “நிலத்திலிருந்து மண்ணை எடுத்து” கடவுள் ஆதாமைப் படைப்பதற்கு முன்பு, ஆதாம் எங்கேயுமே இருக்கவில்லை. (ஆதியாகமம் 2:7) அதேபோல் ஆதாம் செத்த பிறகும், அவன் மண்ணுக்கே திரும்பினான், அதாவது எங்குமே இல்லாமல்போனான்.
இன்றும் இறந்துபோகிறவர்களுக்கு அதேதான் நடக்கிறது. மனிதர்களையும் மிருகங்களையும் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “எல்லாம் மண்ணிலிருந்து வந்தன, எல்லாம் மண்ணுக்கே திரும்புகின்றன.”—பிரசங்கி 3:19, 20.
மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல
பைபிளில், மரணம் அடிக்கடி தூக்கத்தோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. (சங்கீதம் 13:3, அடிக்குறிப்பு; யோவான் 11:11-14; அப்போஸ்தலர் 7:60, அடிக்குறிப்பு) நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிற ஒருவருக்குத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியாது. அதேபோலத்தான், இறந்தவர்களுக்கும் எதுவுமே தெரியாது. ஆனால், தூங்கிக்கொண்டு இருப்பவர்களை எப்படி நம்மால் தூக்கத்திலிருந்து எழுப்ப முடியுமோ அப்படியே இறந்தவர்களைக் கடவுளால் உயிரோடு எழுப்ப முடியும் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 14:13-15) கடவுளால் உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களுக்கு மரணம் ஒரு முற்றுப்புள்ளி கிடையாது.