பச்சை குத்திக்கொள்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
பைபிள் தரும் பதில்
பச்சை குத்துவதைப் பற்றி பைபிளில் ஒரேவொரு தடவைதான் சொல்லப்பட்டிருக்கிறது. அது லேவியராகமம் 19:28-ல் இருக்கிறது. “உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது” என்று அது சொல்கிறது. கடவுள் இந்தச் சட்டத்தை இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்தார். மற்ற தேசத்து ஜனங்களிலிருந்து இவர்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதைக் கொடுத்தார். மற்ற தேசத்து ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களின் பெயர்களையும் சின்னங்களையும் தங்கள் உடலில் பச்சை குத்திக்கொண்டார்கள். (உபாகமம் 14:2) இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த இந்தச் சட்டத்தை இன்று கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்பது உண்மைதான். ஆனாலும், இந்த சட்டத்தைப் பற்றி நாம் நன்றாக யோசித்துப் பார்க்கும்போது, பச்சை குத்துவதைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியும்.
கிறிஸ்தவர்கள் பச்சை குத்திக்கொள்ளலாமா?
பதிலைத் தெரிந்துகொள்ள இந்த பைபிள் வசனங்கள் உங்களுக்கு உதவி செய்யலாம்:
‘பெண்கள் . . . அடக்கத்தினால் . . . தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.’ (1 தீமோத்தேயு 2:9) இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும். மற்றவர்களுக்கு அதிர்ச்சி தரும்படி அல்லது அவர்களுடைய கவனத்தை நம்மேல் திருப்பும்படி நாம் எதையும் செய்யக் கூடாது.
சிலர், தாங்கள் ஏதோவொரு பிரிவில் இருப்பதைக் காட்டுவதற்காக அல்லது தங்கள் உடம்பை என்ன வேண்டுமானாலும் செய்ய தங்களுக்கு உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகப் பச்சை குத்திக்கொள்கிறார்கள். ஆனால், “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:1) உங்களுடைய “சிந்திக்கும் திறனை” பயன்படுத்தி, நீங்கள் ஏன் பச்சை குத்திக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று யோசியுங்கள். ஃபேஷனுக்காக அல்லது ஏதோவொரு பிரிவில் இருப்பதைக் காட்டுவதற்காக நீங்கள் பச்சை குத்திக்கொள்ள ஆசைப்பட்டால், இதை ஞாபகம் வையுங்கள்: ஒருநாள் ஃபேஷன் மாறிவிடலாம் அல்லது அந்தப் பிரிவைவிட்டு நீங்கள் விலகிவிடலாம். ஆனால், பச்சை குத்தியதை உங்களால் மாற்ற முடியாது. எதற்காகப் பச்சை குத்திக்கொள்ள நினைக்கிறீர்கள் என்று யோசித்துப் பார்க்கும்போது உங்களால் ஒரு நல்ல முடிவை எடுக்க முடியும்.—நீதிமொழிகள் 4:7.
“கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால், எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்.” (நீதிமொழிகள் 21:5) நிறைய பேர் அவசரப்பட்டு பச்சை குத்திக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பச்சை குத்திக்கொள்வதால் மற்றவர்கள் அவர்களைப் பற்றித் தப்பாக நினைக்கிறார்கள். வேலை கிடைப்பதும் அவர்களுக்குக் கஷ்டமாகிவிடுகிறது. அதுமட்டுமல்ல, பச்சை குத்தியதை நீக்குவதால் வரும் வலியும், அதற்கு ஏற்படுகிற செலவும் ரொம்ப அதிகம். பச்சை குத்தியதை நீக்குவது இன்று ஒரு பெரிய தொழிலாகவே ஆகிவிட்டது. இது எதைக் காட்டுகிறது? பச்சை குத்திக்கொள்ளும் பெரும்பாலானவர்கள் பிற்பாடு அதை நினைத்து வருத்தப்படுவதைக் காட்டுகிறது. ஆராய்ச்சிகளும் இதைத்தான் காட்டுகின்றன.