Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!

ஃபைஸல் என்பவருக்கு இதயத்தில் ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடந்தது. அதுவும், அவருடைய மனைவி இறந்து ஒரு வருஷம்தான் ஆகியிருந்தது. அவர் சொல்கிறார்... “யோபு புத்தகத்த நான் படிச்சு பார்த்தேன். யெகோவா ஒரு நல்ல காரணத்துக்காகத்தான் அத பைபிள்ல சேர்த்திருக்காருன்னு புரிஞ்சுகிட்டேன். நம்மள மாதிரியே கஷ்டங்கள அனுபவிச்சவங்கள பத்தி பைபிள்ல படிக்கிறப்போ, காயப்பட்ட நம்ம மனசுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். என்னை கேட்டா, வாழ்றதுல கண்டிப்பா ஒரு அர்த்தம் இருக்கு.”

டார்ஷா என்ற பெண், சின்ன வயதிலேயே தன் அம்மாவைப் பறிகொடுத்துவிட்டாள். அவள் சொல்கிறாள்... “எனக்கு வந்திருக்கிற கஷ்டங்கள் கொஞ்சநஞ்சம் இல்ல. ஆனாலும், கடவுள பத்தி தெரிஞ்சுகிட்டதுனால நம்பிக்கையும் சந்தோஷமும் கிடைச்சிருக்கு, வாழ்க்கையில ஒரு பிடிப்பும் கிடைச்சிருக்கு. யெகோவா இருக்கறப்போ நாம ஏன் கவலப்படணும்? அவரு நம்மள காப்பாத்துவாரு. ஒவ்வொரு நாளயும் சமாளிக்கறதுக்கு கண்டிப்பா உதவி செய்வாரு.”

முந்தின கட்டுரைகளில் நாம் பார்த்தபடி, துன்பதுயரங்களைத் தாங்கிக்கொள்ள முடியாதபோது நிறைய பேர் சாவைத் தேடிக்கொள்ள நினைக்கிறார்கள். நீங்களும் ஏதாவது வேதனையில் வெந்துகொண்டிருக்கலாம். ‘இனி வாழ்ந்து என்ன லாபம்?’ என்று யோசிக்கிறீர்களா? அல்லது, ‘என்னை பத்தி கவலப்பட யார் இருக்கா?’ என்று நினைக்கிறீர்களா? வருத்தப்படாதீர்கள்! கடவுள் இருக்கிறார்! நீங்கள் அவருடைய கண்மணிபோல் இருக்கிறீர்கள். அவர் உங்களைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்வார்!

சங்கீதம் 86-ஆம் அதிகாரத்தை எழுதியவர் கடவுளிடம், “இக்கட்டு நாளில் உங்களைக் கூப்பிடுகிறேன். ஏனென்றால், நீங்கள் எனக்குப் பதில் தருவீர்கள்” என்று நம்பிக்கையோடு சொன்னார். (சங்கீதம் 86:7) ஆனால், ‘இக்கட்டான நிலைமைல இருக்கறப்போ கடவுள் எப்படி எனக்கு பதில் தருவாரு’ என்று கேட்கிறீர்களா?

உங்கள் பிரச்சினைகள் மாயமாய் மறைந்துவிடும்படி கடவுள் செய்ய மாட்டார் என்பது உண்மைதான். ஆனால், அவர் உங்களுக்கு மன சமாதானத்தைக் கொடுத்து, பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுவார். “நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள்; உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் யோசனைகளையும் . . . பாதுகாக்கும்” என்று பைபிள் உறுதி அளிக்கிறது. (பிலிப்பியர் 4:6, 7, அடிக்குறிப்பு) கடவுள் நம்மை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார் என்று பைபிள் சொல்கிறது. இதோ, அதில் பதிக்கப்பட்டிருக்கும் சில வைர வரிகள்!

கடவுள் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்

“[சிட்டுக்குருவிகளில்] ஒன்றைக்கூட கடவுள் கண்டும் காணாமல் விடுவதில்லை. . . . சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்.”​லூக்கா 12:6, 7, அடிக்குறிப்பு.

இதை யோசித்துப் பாருங்கள்: சின்னஞ்சிறு பறவைகளை மனிதர்கள் ஒரு பொருட்டாக நினைக்காமல் இருக்கலாம். ஆனால் கடவுள், ஒரேவொரு சிட்டுக்குருவியைக்கூட அற்பமாக நினைப்பதில்லை என்று பைபிள் சொல்கிறது. அந்த ஒவ்வொரு ஜீவனும் அவருக்கு விலைமதிக்க முடியாத ஒரு சொத்து! அப்படியிருக்கும்போது, சிட்டுக்குருவிகளைவிட மனிதர்கள் அவருக்கு எவ்வளவு மதிப்புள்ளவர்கள்! பூமியிலுள்ள அவருடைய படைப்புகளிலேயே விசேஷமான படைப்பு மனிதர்கள்தான். நாம் அவருடைய “சாயலில்” படைக்கப்பட்டிருக்கிறோம். அவருடைய அருமையான குணங்களை வெளிக்காட்டும் திறனோடு உருவாக்கப்பட்டிருக்கிறோம்.—ஆதியாகமம் 1:26, 27.

“யெகோவாவே, நீங்கள் என்னை ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்கள். என்னைத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். . . . என் யோசனைகள்கூட உங்களுக்குத் தெரியும். . . . என்னைச் சோதித்துப் பார்த்து, என் மனதிலுள்ள கவலைகளைப் புரிந்துகொள்ளுங்கள்.”​சங்கீதம் 139:1, 2, 23.

இதை யோசித்துப் பாருங்கள்: கடவுளுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்கள் மனதுக்குள் புதைந்து கிடக்கும் உணர்ச்சிகளையும் கவலைகளையும்கூட அவர் தெரிந்துவைத்திருக்கிறார். உங்களுடைய இக்கட்டான சூழ்நிலையை மற்ற மனிதர்கள் ஒருவேளை புரிந்துகொள்ளாமல் போகலாம். ஆனால், கடவுள் புரிந்துகொள்கிறார். அவர் உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார். உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார். இதைவிட வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில்?!

உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது

“யெகோவாவே, என் ஜெபத்தைக் கேளுங்கள். உதவிக்காக நான் கதறும் சத்தம் உங்கள் சன்னிதியை எட்டட்டும். . . . நான் பேசுவதைக் காதுகொடுத்து கேளுங்கள். நான் கூப்பிடும்போது சீக்கிரமாகப் பதில் கொடுங்கள். . . . ஏழை எளியவர்களின் ஜெபத்தை அவர் கவனித்துக் கேட்பார்.”​சங்கீதம் 102:1, 2, 17.

இதை யோசித்துப் பாருங்கள்: மனித சரித்திரத்தில் கஷ்டங்கள் தலைதூக்கிய காலத்திலிருந்தே, மனிதர்கள் சிந்தியிருக்கும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் யெகோவா தன்னுடைய ஏட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார் என்று சொல்லலாம். (சங்கீதம் 56:8) உங்கள் கண்ணீரை மட்டும் அவர் கவனிக்காமல் போயிருப்பாரா? நீங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம்... நீங்கள் சிந்திய கண்ணீர்த் துளிகளையெல்லாம்... அவர் ஞாபகம் வைத்திருக்கிறார். ஏனென்றால், நீங்கள் அவருடைய உயிருக்கு உயிரானவர்!

“கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன். . . . யெகோவாவாகிய நான் . . . ‘பயப்படாதே, நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று சொல்கிறேன்.”​ஏசாயா 41:10, 13.

இதை யோசித்துப் பாருங்கள்: கடவுள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார். நீங்கள் துவண்டு விழும்போது அவர் உங்களைத் தூக்கி நிறுத்துவார்.

ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது!

“கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”​யோவான் 3:16.

இதை யோசித்துப் பாருங்கள்: நீங்கள் கடவுளுக்கு எவ்வளவு அருமையானவர் என்று கவனித்தீர்களா? உங்களுக்காக அவர் தன்னுடைய மகனாகிய இயேசுவின் உயிரையே கொடுத்திருக்கிறார்! அதனால், என்றென்றுமே மனநிறைவோடு வாழும் வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது! *

‘பட்டதெல்லாம் போதும், இதுக்குமேல வாழ முடியாது’ என்று நினைக்கிறீர்களா? கடவுளுடைய புத்தகத்தை அலசிப் பாருங்கள். கடவுள் தரப்போகும் அருமையான எதிர்காலத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அதில் நம்பிக்கை வையுங்கள். அப்போது, உங்கள் மனதில் சந்தோஷம் களைகட்டும். வாழ்க்கை ஒரு சுமையாகத் தெரியாமல் சுகமாகத் தெரியும்!

^ இயேசு தன்னுடைய உயிரைக் கொடுத்ததால் உங்களுக்கு என்ன நன்மை என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, www.pr2711.com வெப்சைட்டில் இருக்கும் இயேசுவின் மரணத்தை நினைத்துப் பாருங்கள் என்ற வீடியோவைப் பாருங்கள். அது எங்களைப் பற்றி > நினைவு நாள் என்ற தலைப்பில் இருக்கிறது.