வாழ்க்கை சரிதை
என் கைகளைத் தளரவிடாமல் இருக்கத் தீர்மானமாக இருந்தேன்
“டாடி,” “அப்பா,” “அங்கிள்” என்றுதான் பெத்தேலில் இருக்கும் நிறைய இளம் சகோதர சகோதரிகள் என்னைக் கூப்பிடுவார்கள். அவர்கள் அப்படி அன்பாகக் கூப்பிடுவது, 89 வயதான எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. என்னுடைய 72 வருஷ முழுநேர சேவைக்கு யெகோவா கொடுத்த பரிசுகளில் ஒன்றாகத்தான் அதை நினைக்கிறேன். கடவுளுடைய சேவையில் எனக்குக் கிடைத்த அனுபவத்தை வைத்து இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அதாவது, ‘உங்கள் கைகளைத் தளரவிடாமல் இருந்தால், உங்களுடைய செயல்களுக்குக் கைமேல் பலன் கிடைக்கும்.’—2 நா. 15:7, அடிக்குறிப்பு.
பெற்றோரும் கூடப்பிறந்தவர்களும்
என்னுடைய அப்பா அம்மா, உக்ரைனிலிருந்து கனடாவுக்குக் குடிமாறி வந்தவர்கள். மானிடோபா மாகாணத்தில் இருக்கும் ராஸ்பெர்ன் ஊரில் அவர்கள் குடியேறினார்கள். என்னுடைய அன்பு அம்மாவுக்கு மொத்தம் 8 பையன்கள், 8 பெண் பிள்ளைகள்; இரட்டைக் குழந்தைகள் யாருமே இல்லை; நான் 14-வது பிள்ளை! பைபிள் என்றால் என் அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும், அவர் எங்களுக்கு பைபிளை வாசித்துக் காட்டுவார். ஆனால், பணத்துக்காகச் செய்யப்படும் வியாபாரமாகத்தான் அவர் மதத்தைப் பார்த்தார். “பிரசங்கிக்குறதுக்கும் கத்துக்கொடுக்குறதுக்கும் இயேசுவுக்கு யாராவது பணம் கொடுத்தாங்களா, என்ன?” என்று அடிக்கடி தமாசாகக் கேட்பார்.
என் கூடப்பிறந்தவர்களில் மொத்தம் எட்டுப் பேர் சத்தியத்துக்கு வந்தார்கள். அதாவது, மூன்று அண்ணன்களும், மூன்று அக்காக்களும், ஒரு தம்பியும், ஒரு தங்கையும் சத்தியத்துக்கு வந்தார்கள். என் அக்கா ரோஸ், சாகும்வரை பயனியர் ஊழியம் செய்தார். மற்றவர்களை உற்சாகப்படுத்துவதில் தன்னுடைய கடைசிக் காலத்தைச் செலவழித்தார். “உங்கள புதிய உலகத்துல பார்க்க நான் ஆசைப்படறேன்” என்று எல்லாரிடமும் சொன்னார். இப்படி, பைபிள் சொல்லும் விஷயங்களுக்குக் கவனம் செலுத்தும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தினார். என் அண்ணன் ட்டெட், ஆரம்பத்தில், நரகத்தைப் பற்றிப் போதிக்கும் போதகராக இருந்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் ரேடியோவில் அவருடைய பிரசங்கம் ஒலிபரப்பாகும். பாவிகள் எல்லாரும் கொழுந்துவிட்டு எரிகிற நரகத்தில் போட்டு வதைக்கப்படுவார்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவர் நேயர்களை பயமுறுத்துவார். பிற்பாடு, உண்மையோடும் ஆர்வத்தோடும் யெகோவாவுக்குச் சேவை செய்கிற ஓர் ஊழியராக ஆனார்.
என்னுடைய முழுநேர சேவையின் ஆரம்பம்
அது ஜூன் 1944! பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்ததும், சாப்பாட்டு மேஜையின் மீது இருந்த நெருங்கிவந்து கொண்டிருக்கும் புதுப்பிக்கப்பட்ட ஓர் உலகம் * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற ஒரு சிறுபுத்தகம் என் கண்ணில் பட்டது. அதன் முதல் பக்கத்தைப் படித்தேன், பிறகு இரண்டாவது பக்கத்தைப் படித்தேன். அதற்குப் பிறகு முழு புத்தகத்தையும் முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன். படித்து முடித்ததும், இயேசுவைப் போலவே நானும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று தீர்மானித்தேன்.
புத்தகங்களையும் சிறுபுத்தகங்களையும் விற்கும் இரண்டு ஆண்கள் வீட்டுக்கு வந்ததாகவும், அவர்கள்தான் அந்தப்
புத்தகத்தைக் கொடுத்ததாகவும் என் அண்ணன் ஸ்டீவ் சொன்னார். “அதோட விலை வெறும் 5 சென்ட்தான். அதனாலதான் வாங்குனேன்” என்று அவர் சொன்னார். அந்தப் புத்தகத்தைக் கொடுத்துவிட்டுப் போனவர்கள், அடுத்த ஞாயிற்றுக் கிழமை எங்கள் வீட்டுக்கு மறுபடியும் வந்தார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதாகவும், மக்களுடைய கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில் சொல்வதாகவும் சொன்னார்கள். பைபிளின் மீது மதிப்பு வைக்க எங்கள் அப்பா அம்மா சொல்லிக்கொடுத்திருந்ததால், அந்த இரண்டு ஆண்கள் சொன்ன விஷயம் எங்களுக்குப் பிடித்திருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு, வின்னிபெக் என்ற நகரத்தில் சீக்கிரத்தில் நடக்கப்போவதாகவும் அவர்கள் சொன்னார்கள். அங்கேதான் என் அக்கா எல்ஸி வாழ்ந்துவந்தார். அந்த மாநாட்டுக்குப் போவதென்று நான் முடிவு செய்தேன்.வின்னிபெக்வரை, கிட்டத்தட்ட 320 கி.மீ. (200 மைல்) தூரம் சைக்கிளிலேயே போனேன். வழியில் கெல்வுட் என்ற ஊரில் தங்கினேன். எங்களுக்குப் புத்தகங்களைக் கொடுத்தவர்களுடைய வீடு அங்கேதான் இருந்தது. அங்கே தங்கியபோது, கூட்டங்களுக்குப் போனேன். சபை என்றால் என்னவென்று அப்போதுதான் தெரிந்துகொண்டேன். அதோடு, ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் என எல்லாருமே இயேசுவைப் போலவே வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொண்டேன்.
வின்னிபெக்கில் என் அண்ணன் ஜேக்கைச் சந்தித்தேன். வட ஒன்டாரியோவிலிருந்து மாநாட்டுக்காக அவர் வந்திருந்தார். முதல் நாளன்று, அந்த மாநாட்டில் ஞானஸ்நானம் கொடுக்கப்படும் என்று ஒரு சகோதரர் அறிவித்தார். ஞானஸ்நானம் எடுப்பதென்று ஜேக்கும் நானும் முடிவு செய்தோம். ஞானஸ்நானம் எடுத்தவுடனே முடிந்தளவு சீக்கிரமே பயனியர் ஊழியத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றும் முடிவெடுத்தோம். மாநாடு முடிந்ததும், சீக்கிரத்திலேயே ஜேக் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார். எனக்கு அப்போது 16 வயது என்பதால், நான் பள்ளிக்குப் போக வேண்டியிருந்தது. ஆனால், அடுத்த வருஷமே நானும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.
பாடங்களைக் கற்றுக்கொண்டேன்
மானிடோபா மாகாணத்தில் இருக்கிற சுரீஸ் என்ற ஊரில், ஸ்டான் நிக்கல்சனோடு சேர்ந்து நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். பயனியர் ஊழியம் அவ்வளவு சுலபமில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன். எங்கள் கையிலிருந்த காசெல்லாம் கரைந்துகொண்டே வந்தது; இருந்தாலும், தொடர்ந்து ஊழியம் செய்தோம். ஒருசமயம், நாள் முழுவதும் ஊழியம் செய்துவிட்டுப் பயங்கரப் பசியோடு வீடு திரும்பினோம்; கையில் சுத்தமாகக் காசே இல்லை. ஆனால், வீட்டுக்கு வந்ததும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கதவுக்குப் பக்கத்தில் மூட்டை நிறைய உணவுப் பொருள்கள் இருந்தன. அது எப்படி வந்ததென்று இன்றுவரை எங்களுக்குத் தெரியவில்லை! அன்று ராத்திரி எங்களுக்கு ராஜபோஜனம்தான்! எங்கள் கைகளைத் தளரவிடாமல் இருந்ததற்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பலன்! சொல்லப்போனால், அந்த மாதக் கடைசியில், அதுவரை இல்லாதளவுக்கு என்னுடைய எடை கூடியிருந்தது!
சில மாதங்களுக்குப் பிறகு, சுரீஸிலிருந்து வடக்கே, கிட்டத்தட்ட 240 கி.மீ. (150 மைல்) தூரத்தில் இருக்கிற கில்பர்ட் ப்ளெய்ன்ஸ் என்ற ஊருக்கு நியமிக்கப்பட்டோம். அந்தக் காலத்திலெல்லாம் ராஜ்ய மன்றங்களின் மேடையில் நீண்ட ஒரு பட்டியல் தொங்கவிடப்பட்டிருக்கும். சபையின் மாதாந்திர ஊழிய அறிக்கை அதில் போடப்பட்டிருக்கும். ஒருமாதம் சபையின் ஊழிய மணிநேரம் குறைந்ததால், நான் ஒரு பேச்சு கொடுத்தேன். சகோதர சகோதரிகள் இன்னும் நன்றாக உழைக்க வேண்டுமென்று அதில் வலியுறுத்தினேன். கூட்டம் முடிந்ததும், ஒரு வயதான பயனியர் சகோதரி என்னிடம் வந்தார்; அவருடைய கணவர் சத்தியத்தில் இல்லை. அந்தச் சகோதரி கலங்கிய கண்களோடு, “என்னால முடிஞ்சளவுக்கு முயற்சி செஞ்சேன், ஆனா, இதுக்கு மேல செய்ய முடியல” என்று சொன்னார். அதைக் கேட்டதும், என் கண்களும் கலங்கிவிட்டன. நான் அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
துடிப்புமிக்க இளம் சகோதரர்கள், சிலசமயங்களில், என்னைப் போலவே தவறுகள் செய்துவிடலாம்; பிறகு அதை நினைத்து நொந்துகொள்ளலாம். ஆனால், என் அனுபவத்தில் ஒன்றைத் தெரிந்துகொண்டேன். கைகளைத் தளரவிடுவதற்குப் பதிலாக, தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; அவற்றை அடிக்கடி ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும். தொடர்ந்து உண்மையோடு சேவை செய்தால், கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்.
கியுபெக்கில் எங்களுக்கு இருந்த போராட்டம்
என்னுடைய 21 வயதில், 14-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது எனக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்! பிப்ரவரி 1950-ல் நான் பட்டம் பெற்றேன். அந்தப் பள்ளியில் இருந்த கால்வாசி பேர், கனடா நாட்டில் இருக்கிற கியுபெக் மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டார்கள். பிரெஞ்சு மொழி பேசுகிற அந்த மாகாணத்தில், சாட்சிகளுக்கு எதிரான மத ரீதியிலான துன்புறுத்தல் பரவலாக இருந்தது. வால்டோர் என்ற ஊருக்கு நான் நியமிக்கப்பட்டேன். தங்கச் சுரங்கங்கள் நிறைந்த கனடாவில் இருந்த ஓர் ஊர்தான் அது! ஒருநாள், பக்கத்திலிருந்த வால்-செனவில் என்ற கிராமத்தில் ஊழியம் செய்வதற்காக கொஞ்சப் பேர் போனோம். உடனடியாக கிராமத்தைவிட்டுப் போகவில்லை என்றால், எங்களைக் கடுமையாகத் தாக்கப்போவதாக உள்ளூர் மதப்போதகர் மிரட்டினார். அதனால், நாங்கள் நீதிமன்றத்துக்குப் போனோம்; நான்தான் வழக்குத் தொடுத்தேன். அந்த மதப்போதகருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. * —அடிக்குறிப்பைப் பாருங்கள்.
அந்தச் சம்பவமும் அதேபோல் நடந்த மற்ற சம்பவங்களும் “கியுபெக்கில் நாங்கள் பட்ட கஷ்டங்களில்” அடங்கும்.
கியுபெக் மாகாணம், 300 வருஷங்களுக்கும்மேல் கத்தோலிக்க சர்ச்சின் கட்டுப்பாட்டில் இருந்தது. மதக் குருமார்களும், அவர்களுடைய அரசியல் கூட்டாளிகளும் யெகோவாவின் சாட்சிகளைத் துன்புறுத்தினார்கள். அவை ரொம்பக் கஷ்டமான நாட்களாக இருந்தன, நாங்களோ கொஞ்சம் பேர்தான் இருந்தோம். ஆனால், எங்கள் கைகளை நாங்கள் தளரவிடவே இல்லை. கியுபெக்கில் இருந்த நேர்மையான ஜனங்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள். நிறைய பேருக்குப் பைபிள் படிப்பு எடுக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது; அவர்கள் சத்தியத்துக்கும் வந்தார்கள். மொத்தம் 10 பேர் இருக்கிற ஒரு பெரிய குடும்பத்துக்கு நான் படிப்பு எடுத்தேன்; அவர்கள் அத்தனை பேரும் சத்தியத்துக்கு வந்தார்கள். அந்தக் குடும்பம் காட்டிய தைரியத்தைப் பார்த்து, மற்றவர்களும் கத்தோலிக்க சர்ச்சைவிட்டு வெளியேறினார்கள். தொடர்ந்து நாங்கள் பிரசங்கித்தோம்; நாங்கள் பட்ட கஷ்டங்களுக்கான பலன் கடைசியில் கிடைத்தது.சகோதரர்களுடைய சொந்த மொழியிலேயே பயிற்சி கொடுத்தேன்
1956-ல், நான் ஹெய்டிக்கு நியமிக்கப்பட்டேன். அங்கே இருந்த நிறைய மிஷனரிகள், பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள சிரமப்பட்டார்கள்; ஆனாலும், மக்கள் காதுகொடுத்துக் கேட்டார்கள். “நாங்க என்ன சொல்ல வர்றோங்குறத ஜனங்க ரொம்ப பொறுமையா கேட்டாங்க; அத பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டோம்” என்று ஸ்டேன்லி போகஸ் என்ற மிஷனரி சகோதரர் சொன்னார். நான் கியுபெக்கில் பிரெஞ்சு கற்றிருந்ததால், ஆரம்பத்தில் எனக்குச் சுலபமாக இருந்தது. ஆனால், போகப்போகத்தான் ஒரு விஷயம் புரிந்தது. அதாவது, உள்ளூர் சகோதரர்கள் நிறைய பேர், ஹெய்டியன் கிரியோல் மொழிதான் பேசினார்கள். நாங்கள் நன்றாக ஊழியம் செய்ய வேண்டுமென்றால், அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதனால், நாங்கள் அந்த மொழியைக் கற்றுக்கொண்டோம்; அதற்கான பலன்களையும் அனுபவித்தோம்.
சகோதரர்களுக்கு உதவுவதற்காக, ஹெய்டியன் கிரியோல் மொழியில் காவற்கோபுர பத்திரிகையையும் மற்ற பிரசுரங்களையும் மொழிபெயர்ப்பதற்கு ஆளும் குழுவிடமிருந்து அனுமதி வாங்கினோம். கூட்டங்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்தது. 1950-ல் வெறும் 99 பிரஸ்தாபிகள்தான் ஹெய்டியில் இருந்தார்கள். ஆனால், 1960-க்குள் அந்த எண்ணிக்கை 800 ஆக உயர்ந்தது! அந்தச் சமயத்தில், நான் பெத்தேலில் சேவை செய்ய நியமிக்கப்பட்டேன். 1961-ல், ராஜ்ய ஊழியப் பள்ளியின் போதகர்களில் ஒருவராக இருக்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது. சபைக் கண்காணிகள், விசேஷ பயனியர்கள் என மொத்தம் 40 பேருக்குப் பயிற்சி கொடுக்க முடிந்தது. 1962, ஜனவரி மாதம் நடந்த ஒரு மாநாட்டில், ஊழியத்தில் அதிகமாக ஈடுபடும்படி தகுதி பெற்ற உள்ளூர் சகோதரர்களை உற்சாகப்படுத்தினோம்; சிலர் விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சரியான சமயத்தில்தான் நியமிக்கப்பட்டார்கள்; ஏனென்றால், அப்போது எதிர்ப்பு தலைதூக்க ஆரம்பித்திருந்தது.
1962, ஜனவரி 23-ல், மாநாடு முடிந்தவுடனேயே ஆன்ட்ரூ டாமிக்கோவும் நானும் கிளை அலுவலகத்தில் கைது செய்யப்பட்டோம். கையிருப்பிலிருந்த ஜனவரி 8, 1962 பிரெஞ்சு விழித்தெழு! பத்திரிகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், பயிற்சி பெற்ற உள்ளூர் சகோதரர்கள் வெற்றிகரமாக வேலையைத் தொடர்ந்தார்கள். அவர்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும் அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்தையும் நினைக்கும்போது, எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. இன்று, ஹெய்டியன் கிரியோல் மொழியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்கூட கிடைக்கிறது. ஒருகாலத்தில் அது எங்களுடைய கனவாகத்தான் இருந்தது.
ஹெய்டியில் பில்லிசூனியம் செய்யப்படுவதாக பிரெஞ்சு செய்தித்தாள்களில் வந்த தகவலை அந்த விழித்தெழு! பத்திரிகை மேற்கோள் காட்டியிருந்தது. சிலருக்கு அது பிடிக்கவில்லை; கிளை அலுவலகத்தில் நாங்கள்தான் அந்தக் கட்டுரையை எழுதினோம் என்று நினைத்துக்கொண்டார்கள். சில வாரங்களுக்குப் பிறகு, ஹெய்டியை விட்டு மிஷனரிகள் வெளியேற்றப்பட்டார்கள்.மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நடந்த கட்டுமான வேலை
ஹெய்டியில் சேவை செய்த பிறகு, மத்திய ஆப்பிரிக்க குடியரசில் மிஷனரி சேவை செய்யும்படி நியமிக்கப்பட்டேன். பிறகு, பயணக் கண்காணியாகவும் கிளை அலுவலகக் கண்காணியாகவும் சேவை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அந்தச் சமயத்தில், ராஜ்ய மன்றங்கள் ரொம்ப ரொம்ப எளிமையாக இருந்தன. புதர்களிலிருந்த காய்ந்துபோன புற்களை எடுக்கவும், அதை வைத்து கூரை போடவும் நான் கற்றுக்கொண்டேன். இதையெல்லாம் நான் கஷ்டப்பட்டு செய்ததை, அந்த வழியாக வருபவர்கள் எல்லாரும் விசித்திரமாகப் பார்த்தார்கள். ஆனால், அதைப் பார்த்த நம் சகோதரர்களுக்கு உற்சாகம் பிறந்தது; சொந்தமாக ராஜ்ய மன்றங்களைக் கட்டுவதிலும், அவற்றைப் பராமரிப்பதிலும் அவர்களுடைய ஈடுபாடு அதிகமானது. மதத்தலைவர்கள் எங்களைக் கேலி கிண்டல் செய்தார்கள். ஏனென்றால், அவர்களுடைய சர்ச்சுகளின் கூரைகள் தகரத்தால் போடப்பட்டிருந்தன. அவர்களுடைய கேலி கிண்டலையெல்லாம் நாங்கள் கண்டுகொள்ளவே இல்லை. புல்கூரைகளாலான ராஜ்ய மன்றங்களில் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தினோம். அப்போது ஏற்பட்ட பயங்கரமான ஒரு புயல், கேலி கிண்டல் செய்த அந்த மதத்தலைவர்களுடைய வாயை அடைத்தது. அந்தப் புயல் காற்றில் அவர்களுடைய சர்ச்சுகளிலிருந்த தகரக் கூரைகள் பறந்துபோய் தெருக்களில் விழுந்தன. ஆனால், எங்களுடைய ராஜ்ய மன்றங்களிலிருந்த புல்கூரைகளுக்கு ஒன்றுமே ஆகவில்லை. நம்முடைய வேலையை இன்னும் நல்லபடியாகக் கவனித்துக்கொள்வதற்காக, ஐந்தே மாதங்களில் புதிதாக ஒரு கிளை அலுவலகத்தையும் மிஷனரி இல்லத்தையும் நாங்கள் கட்டினோம். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
வைராக்கியமான ஒரு பயனியரைக் கரம் பிடித்தேன்
1976-ல், மத்திய ஆப்பிரிக்க குடியரசில், நம் வேலைக்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால், சாட் என்ற நாட்டின் தலைநகரமான இன்ஜமீனாவில் நான் நியமிக்கப்பட்டேன். அங்கே சந்தோஷமான ஒரு விஷயம் நடந்தது! அங்கேதான், கேமரூன் நாட்டைச் சேர்ந்த ஹேப்பி என்ற சகோதரியைச் சந்தித்தேன்; விசேஷ பயனியர் சேவையை அவள் வைராக்கியமாகச் செய்துவந்தாள். ஏப்ரல் 1, 1978-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். அதே மாதத்தில் அங்கே உள்நாட்டுப் போர் வெடித்தது. அதனால், எங்களைப் போல நிறைய பேர், அந்த நாட்டின் தென்பகுதிக்குத் தப்பியோட வேண்டியிருந்தது. போர் முடிந்ததும், நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பினோம். ஆனால், ஆயுதமேந்திய கும்பலின் தலைமை அலுவலகமாக எங்கள் வீடு மாறியிருந்தது. நாங்கள் பறிகொடுத்தது, பத்திரிகைகளை மட்டுமல்ல; ஹேப்பியின் கல்யாண உடையையும், எங்களுக்கு வந்த கல்யாணப் பரிசுகளையும்தான்! ஆனாலும், எங்கள் கைகளை நாங்கள் தளரவிடவில்லை. ஏனென்றால், ஹேப்பிக்கு நான் இருந்தேன், எனக்கு அவள் இருந்தாள்! அதனால், எதற்கும் கவலைப்படாமல் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தோம்.
இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, மத்திய ஆப்பிரிக்க குடியரசில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அதனால், அங்கே திரும்பிப் போய் நாங்கள் பயண ஊழியத்தை ஆரம்பித்தோம். வேன்தான் எங்களுடைய வீடு! அந்த வேனில், மடித்து வைக்கக் கூடிய படுக்கை... 200 லிட்டர் தண்ணீர் பிடிக்கிற ஒரு பெரிய பீப்பாய்... ஃபிரிட்ஜ்... கேஸ் ஸ்டவ்... இவற்றையெல்லாம் வைத்திருந்தோம். பொதுவாகவே, பயணம் செய்வது கஷ்டமாக இருந்தது. ஒருதடவை, நாங்கள் மொத்தம் 117 போலீஸ் சோதனைச்சாவடிகளில் வண்டியை நிறுத்த வேண்டியிருந்தது.
வெப்பநிலை அடிக்கடி 50 டிகிரி செல்சியஸைத் தொட்டது. மாநாடுகளில் ஞானஸ்நானம் கொடுப்பதற்குத் தண்ணீர் கிடைப்பதே சிலசமயங்களில் திண்டாட்டமாக இருந்தது. அதனால், நம்முடைய சகோதரர்கள், வற்றிப்போன ஆற்றுப்படுகைகளுக்குப் போய் கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டிதான் ஞானஸ்நானம் கொடுப்பதற்குத் தேவையான தண்ணீரைச் சேகரிக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும், பீப்பாய்களில்தான் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.
மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் செய்த சேவை
1980-ல் நைஜீரியாவுக்கு மாற்றப்பட்டோம். 21/2 வருஷங்களாக அங்கே தங்கி, புதிய அலுவலகம் கட்டுவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில் உதவினோம். இரண்டு மாடிகள் கொண்ட குடோனை சகோதரர்கள் வாங்கியிருந்தார்கள். அதையெல்லாம் பிரித்து மறுபடியும் நம்முடைய இடத்தில் பொருத்த வேண்டியிருந்தது. ஒருநாள் காலையில், பிரிக்கும் வேலையில் உதவுவதற்காக குடோனுக்குமேல் ஏறினேன். கிட்டத்தட்ட மத்தியான நேரத்தில், வந்த வழியாகவே கீழே இறங்கினேன். ஆனால், எல்லாமே தனித்தனியாகப் பிரித்துவைக்கப்பட்டிருந்ததால்,
அப்படியே கீழே விழுந்துவிட்டேன். நான் ரொம்ப மோசமான நிலையில் இருந்ததுபோல் தெரிந்தது. ஆனால், எக்ஸ்ரே எடுத்த பிறகும், மற்ற பரிசோதனைகளைச் செய்த பிறகும், “சில தசைநார்கள் கிழிஞ்சுபோயிருக்கு. கவலைப்படாதீங்க, ஒண்ணு ரெண்டு வாரத்துல சரியாயிடுவாரு” என்று ஹேப்பியிடம் டாக்டர் சொன்னார்.1986-ல், நாங்கள் கோட் டீவாருக்கு மாறிப் போய், அங்கே பயண ஊழியம் செய்தோம். பக்கத்து நாடான பர்கினா பாஸோவில் இருந்த சபைகளுக்கும் நாங்கள் போக வேண்டியிருந்தது. கொஞ்ச நாட்களுக்கு பர்கினா எங்கள் சொந்த நாடுபோல் ஆகுமென்று அப்போது நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
1956-ல் நான் கனடாவைவிட்டு வந்தேன். 47 வருஷங்களுக்குப் பிறகு, 2003-ல் மறுபடியும் கனடாவுக்குப் போய், அங்கிருந்த பெத்தேலில் சேவை செய்தேன். ஆனால், இந்த முறை ஹேப்பியோடு! ஆவணங்களைப் பொறுத்தவரை, நாங்கள் கனடா நாட்டுப் பிரஜைகள்; ஆனால், நாங்கள் என்னவோ ஆப்பிரிக்கா நாட்டுப் பிரஜைகளைப் போல்தான் உணர்ந்தோம்.
2007-ல், என்னுடைய 79-வது வயதில், மறுபடியும் ஆப்பிரிக்காவுக்குப் போனோம். பர்கினா பாஸோவுக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். நாட்டின் ஆலோசனைக் குழுவின் அங்கத்தினராக அங்கே நான் சேவை செய்தேன். பிறகு அந்த அலுவலகம், மொழிபெயர்ப்பு அலுவலகமாக மாற்றப்பட்டது; பெனின் கிளை அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் அது வந்தது. ஆகஸ்ட் 2013-ல் நாங்கள் பெனின் கிளை அலுவலகத்துக்கு நியமிக்கப்பட்டோம்.
என்னுடைய உடல்நிலை அவ்வளவு நன்றாக இல்லை; இருந்தாலும், ஊழியம் செய்வதென்றால் எனக்கு ரொம்ப இஷ்டம். கடந்த மூன்று வருஷங்களில், மூப்பர்களுடைய அன்பான உதவியாலும், என் மனைவியின் ஆதரவாலும், என்னுடைய பைபிள் மாணாக்கர்களான கிடியனும் ஃப்ராஸிஸும் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது அவர்கள் யெகோவாவுக்கு வைராக்கியமாகச் சேவை செய்துவருகிறார்கள்.
பிறகு, நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் கிளை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டோம். என் உடல்நிலையை அந்த பெத்தேல் குடும்பம் பார்த்துக்கொள்கிறது. தென் ஆப்பிரிக்கா, நான் சேவை செய்கிற ஏழாவது ஆப்பிரிக்க நாடு! அக்டோபர் 2017-ல் இன்னொரு பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நாங்கள் இரண்டு பேரும் நியு யார்க், வார்விக்கில் இருக்கிற தலைமை அலுவலக அர்ப்பணிப்பு விழாவில் கலந்துகொண்டோம்! அது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி!
வருடாந்திர புத்தகம் 1994, (ஆங்கிலம்) பக்கம் 255 இப்படிச் சொல்கிறது: “நிறைய வருஷங்கள் வைராக்கியமாகச் சேவை செய்திருக்கும் ஊழியர்களே, ‘தைரியமாயிருங்கள், உங்களுடைய கைகளைத் தளரவிடாதீர்கள். ஏனென்றால், உங்களுடைய செயல்களுக்குக் கைமேல் பலன் கிடைக்கும்.’—2 நா. 15:7.” இந்த அறிவுரையின்படி நடக்க ஹேப்பியும் நானும் தீர்மானமாக இருக்கிறோம்; இப்படிச் செய்ய மற்றவர்களையும் உற்சாகப்படுத்த விரும்புகிறோம்.
^ பாரா. 9 1944-ல், யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது. இப்போது அச்சிடப்படுவதில்லை.
^ பாரா. 18 நவம்பர் 8, 1953 ஆங்கில விழித்தெழு! இதழில், பக்கங்கள் 3-5-ல் இருக்கிற, “யெகோவாவின் சாட்சிகளைத் தாக்கிய கியுபெக் மதப்போதகருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
^ பாரா. 23 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்திர புத்தகம் 1994, (ஆங்கிலம்) பக்கங்கள் 148-150-ல், இந்த விவரங்கள் இருக்கின்றன.
^ பாரா. 26 மே 8, 1966 ஆங்கில விழித்தெழு! இதழில், பக்கம் 27-ல் இருக்கிற, “உறுதியான அஸ்திவாரத்தின்மேல் கட்டப்பட்ட கட்டிடம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.