குட்டி நாய்களுக்கு குட்டி விருந்து
அமெரிக்காவில் ஆரிகான் மாகாணத்தில் வாழ்கிற நிக் என்பவரின் கதையைப் பார்க்கலாம். “2014-வது வருஷத்தோட ஆரம்பத்துல, என் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த வியாபார பகுதிக்கு, என்னோட ரெண்டு குட்டி நாய்கள கூட்டிக்கிட்டு ‘வாக்கிங்’ போயிருந்தேன். அங்க, பொதுவா யெகோவாவின் சாட்சிகள் வீல் ஸ்டாண்ட் ஊழியம் செய்வாங்க. அவங்க ரொம்ப நல்லா ‘டிரெஸ்’ பண்ணியிருப்பாங்க; எல்லாரையும் பாத்து அன்பா சிரிப்பாங்க.
“யெகோவாவின் சாட்சிகள், ஜனங்ககிட்ட மட்டும் இல்ல, என்னோட நாய்கள்கிட்டயும் ரொம்ப அன்பாக நடந்துகிட்டாங்க. ஒருநாள், வீல் ஸ்டாண்ட் பக்கத்துல நின்னுட்டு இருந்த இலேன் என்னோட நாய்களுக்கு பிஸ்கட் போட்டாங்க. அப்பயிருந்து, அவரோட வீல் ஸ்டாண்ட் பக்கம் போனாலே அந்த ‘குட்டி விருந்துக்காக’ என்னோட நாய்கள் அவங்ககிட்ட என்னை இழுத்துட்டு போகும்.
“என் நாய்களுக்கு அவங்க கொடுக்குற ‘குட்டி விருந்து’ பிடிச்சிருந்துது. எனக்கு அவங்க அன்பா பேசுறது பிடிச்சிருந்துது. இப்படியே பல மாசம் போச்சு. ஆனாலும், அவங்ககிட்ட அதிகமா பேசுறதுக்கு நான் பயந்தேன். எனக்கு 70 வயசுக்கு மேல ஆகியிருந்துச்சு. யெகோவாவின் சாட்சிகள் என்ன நம்புனாங்கனு வேற எனக்கு தெரியாது. நிறைய சர்ச்சுகள் மேலயிருந்த நம்பிக்கையே எனக்குப் போயிட்டதால, நானே பைபிள படிச்சுக்கலாம்னு நெனச்சேன்.
“இதுக்கிடையில, மத்த இடங்கள்லயும் யெகோவாவின் சாட்சிகள் வீல் ஸ்டாண்ட் ஊழியம் செஞ்சிட்டுருந்தத பாத்தேன். அவங்களும் ரொம்ப அன்பா நடந்துகிட்டாங்க. நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பைபிள்லயிருந்தே பதில் சொன்னாங்க. அதனால, யெகோவாவின் சாட்சிகள் மேலயிருந்த நம்பிக்கை எனக்கு அதிகமாச்சு.
“ஒருநாள், இலேன் என்கிட்ட, ‘செல்லப் பிராணிகள கடவுள் கொடுத்த பரிசா நிறைய பேர் பாக்குறாங்க. நீங்களும் அப்படித்தான் நெனக்கிறீங்களா?’னு கேட்டாங்க. ‘ஆமா, கண்டிப்பா’ அப்படினு சொன்னேன். அதுக்கு பிறகு, அவங்க எனக்கு ஏசாயா 11:6-9-ஐ வாசிச்சு காட்டுனாங்க. அன்னயலிருந்து, பைபிள பத்தி நிறைய தெரிஞ்சுக்க எனக்கு ஆசையா இருந்துச்சு. இருந்தாலும், அவங்க கொடுக்குற புத்தகங்கள வாசிக்க எனக்கு பிடிக்கல.
“இப்படியே கொஞ்ச நாள் போச்சு. இலேன் கிட்டயும் அவரோட கணவர் பிரென்ட் கிட்டயும் நான் கொஞ்ச நேரம்தான் பேசுவேன். ஆனா, அது ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். கிறிஸ்து மாதிரி நடந்துக்க என்ன செய்யணும்னு தெரிஞ்சுக்க பைபிள்ல மத்தேயு புத்தகத்துலயிருந்து அப்போஸ்தலர் புத்தகம்வரைக்கும் என்னை படிச்சு பாக்க சொன்னாங்க. அதனால நானும் படிச்சேன். சீக்கிரத்திலயே, இலேனோடயும் பிரென்டோடயும் சேந்து நான் பைபிள படிக்க ஒத்துக்கிட்டேன். இதெல்லாம் 2016-வது வருஷத்தோட மத்திபத்துல நடந்துச்சு.
“ஒவ்வொரு வாரமும் பைபிள் படிப்பு படிக்கிறதுக்கும் ராஜ்ய மன்றத்துல நடக்குற கூட்டங்கள்ல கலந்துக்குறதுக்கும் ஆவலா காத்துட்டிருப்பேன். இந்த வயசுலயும் பைபிள பத்தி தெரிஞ்சுக்க எனக்கு கெடச்ச வாய்ப்ப நான் பெரிய ஆசீர்வாதமா நெனக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறம், நான் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியா ஆனேன். எனக்கு இப்போ 79 வயசானாலும் உண்மையான மதத்த கண்டுபிடிச்சிட்டேன்ங்கிற திருப்தி இருக்குது. யெகோவா தன்னை வணங்குற மக்கள்ல என்னையும் ஒரு ஆளா சேத்துகிட்டத நெனச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்று அவர் எழுதினார்.