இறைவேதம் மாற்றப்பட்டிருக்கிறதா?
ஆரம்பத்தில் இறைவன் கொடுத்த வேதத்துக்கும் இப்போது நம் கையில் இருக்கும் வேதத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன என்று சிலர் நினைக்கிறார்கள். இறைவனின் வார்த்தை “என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இறைத்தூதர் ஏசாயா சொன்னார். (ஏசாயா 40:8) வேதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இறைவனின் வாக்குறுதிகளில் எந்தக் கலப்படமும் செய்யப்படாமல் இன்றுவரை பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இதை எப்படி உறுதியாக நம்பலாம்?
இறைவனுக்கு, தன்னுடைய வேதத்தைப் பாதுகாக்க சக்தி இருக்கிறது. அதிலிருக்கும் விஷயங்களை யாரும் மாற்றிவிடாதபடி அவரால் பார்த்துக்கொள்ள முடியும். பழங்காலத்தில், வேதத்தை நகல் எடுத்தவர்கள் அதைக் கையால் எழுதி நகல் எடுத்தார்கள். அப்படிச் செய்யும்போது அதில் எதையும் சேர்த்துவிடாமலோ, மாற்றிவிடாமலோ, விட்டுவிடாமலோ இருப்பதற்காக ஒவ்வொரு எழுத்தையும் எண்ணினார்கள். மனிதர்களால் எல்லாவற்றையும் நூறு சதவீதம் சரியாக செய்ய முடியாது என்பது உண்மைதான். சிலர் நகல் எடுப்பதில் சின்னச் சின்ன தவறுகளைச் செய்திருக்கிறார்கள்.
இன்று நம்மிடம் இருக்கும் இறைவேதத்தில் இறைவன் சொன்ன செய்திதான் இருக்கிறது என்று நாம் எப்படி நம்பலாம்?
வேதத்தின் பழங்கால கையெழுத்துப் பிரதிகள் ஆயிரக்கணக்கில் நகல் எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த நகல்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்தாலே தவறுகள் ஏதாவது இருந்தால் அவற்றைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.—இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள jw.org-ல் “பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
உதாரணத்துக்கு, சவக்கடல் சுருள்கள் என்ற பழங்கால ஆவணங்களைப் பற்றிப் பார்க்கலாம். இதை 1947-ல் சவக்கடலுக்கு பக்கத்தில் இருக்கிற குகைகளில் அரேபிய நாடோடிகள் கண்டுபிடித்தார்கள். 2,000 வருஷங்களுக்கும் மேல் பழமையான இறைவேதத்தின் சில பகுதிகள் அந்த ஆவணங்களில் இருக்கின்றன. பழங்கால கையெழுத்துப் பிரதிகளையும் இன்றைக்கு நம்மிடம் இருக்கும் வேதத்தையும் வல்லுநர்கள் ஒப்பிட்டுப் பார்த்தார்கள். அப்படிப் பார்த்தபோது என்ன கண்டுபிடித்தார்கள்?
அன்றைக்கு எழுதப்பட்ட மூலப் பதிவுகளில் என்ன இருந்ததோ அதேதான் இன்று நம் கையிலுள்ள வேதத்திலும் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்கள். * இன்றுவரை அதில் எதுவுமே மாறாதபடி இறைவன் அதைப் பத்திரமாகப் பாதுகாத்து வந்திருக்கிறார். அப்படியென்றால் இன்றுள்ள இறைவேதத்தில் இருப்பது இறைவன் சொன்ன செய்திதான் என்பதை நாம் உறுதியாக நம்பலாம்.
அதனால் இறைவேதத்தை யாரும் மாற்றவில்லை என்ற முழு நம்பிக்கையோடு நாம் அதைப் படிக்கலாம். இதை மனதில் வைத்து, நபிமார்களிடமிருந்து இறைவனைப் பற்றி என்ன தெரிந்துகொள்ளலாம் என்று அடுத்து பார்க்கலாம்.
^ பாரா. 7 கெய்ஸா வெர்மெஷ் எழுதிய த கம்ப்ளீட் டெட் ஸீ ஸ்க்ரோல்ஸ் இன் இங்லிஷ், பக்கம் 16.