Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கம்பெனி முதலாளி தன்னிடம் வேலை செய்பவரை வைத்து கடிதம் எழுதுவதுபோல் இறைவன் சில உண்மையுள்ள மனிதர்களை வைத்து வேதத்தை எழுதினார்

படைப்பாளர் தன்னுடைய வாக்குறுதிகளை நமக்கு எப்படித் தெரியப்படுத்துகிறார்?

படைப்பாளர் தன்னுடைய வாக்குறுதிகளை நமக்கு எப்படித் தெரியப்படுத்துகிறார்?

மனிதர்களைப் படைத்த சமயத்தில் இருந்தே நம் படைப்பாளர் வானவர்கள் மூலமாகவும் இறைத்தூதர்கள் மூலமாகவும் மக்களிடம் பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் பேசிய விஷயங்களையும், கொடுத்த வாக்குறுதிகளையும் எழுதிவைக்க வேண்டும் என்றும் அவர் ஆசைப்பட்டார். இறைவன் கொடுத்த இந்த வாக்குறுதிகளுக்கும் நம்முடைய எதிர்காலத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அந்த வாக்குறுதிகள் எல்லாம் எங்கே இருக்கின்றன?

இறைவன் நம்மிடம் சொல்ல நினைத்த விஷயங்களை எல்லாம் வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16) இந்த விஷயங்களை எழுதுவதற்கு இறைவன் நபிமார்களைப் பயன்படுத்தினார். எப்படி? (2 பேதுரு 1:21) தன்னுடைய எண்ணங்களை அவர்களுடைய மனதில் வைத்தார். அதை அவர்கள் எழுதினார்கள். இதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்? உதாரணத்துக்கு, ஒரு கம்பெனியின் முதலாளி தன்னிடம் வேலை செய்பவரிடம் ஒரு கடிதத்தை எழுதச் சொல்கிறார். முதலாளி சொல்லச் சொல்ல அவர் அந்தக் கடிதத்தை எழுதுகிறார். அப்படியென்றால் அந்தக் கடிதம் யாருடையது? முதலாளியுடையது. அதேமாதிரிதான் இறைவன் சொன்னதை மனிதர்கள் எழுதினார்கள். அப்படியென்றால் இறைவேதம் யாருடையது? இறைவனுடையதுதான்.

இறைவேதம் உலகம் முழுவதும் கிடைக்கிறது

இறைவனுடைய செய்தி ரொம்ப முக்கியமானது. அதை எல்லாரும் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். இறைவன் சொல்கிற “நித்திய நல்ல செய்தி” இன்று “எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும்” ரொம்பச் சுலபமாகக் கிடைக்கிறது. (வெளிப்படுத்துதல் 14:6) இறைவனுடைய ஆசியினால் அவருடைய வேதம் முழுமையாகவோ பகுதியாகவோ 3,000-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. இந்த உலகத்தில் வேறெந்த புத்தகமும் இத்தனை மொழிகளில் கிடைப்பதில்லை.