பைபிளின் கருத்து
கருக்கலைப்பு
ஒவ்வொரு வருஷமும் 5 கோடிக்கும் அதிகமான கருக்கலைப்பு செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை, சில நாடுகளில் இருக்கும் ஜனத்தொகையையே மிஞ்சிவிடுகிறது!
‘இது என் சொந்த விருப்பம்’ என்று நினைப்பது சரியா?
மக்கள் என்ன சொல்கிறார்கள்
பணக்கஷ்டத்தினாலோ, குடும்ப பிரச்சினைகளினாலோ, மேற்படிப்பு படிக்க வேண்டும் அல்லது நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையினாலோ சில பெண்கள் கருக்கலைப்பு செய்கிறார்கள். இன்னும் சிலர், குழந்தையை தன்னந்தனியாக வளர்க்க முடியாது என்று நினைப்பதால் கருக்கலைப்பு செய்கிறார்கள். அதே சமயத்தில், கருக்கலைப்பு செய்வது தவறு என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். அப்படி செய்வது, ஒரு தாய் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு செய்யும் துரோகம் என்று நினைக்கிறார்கள்.
பைபிள் என்ன சொல்கிறது
கடவுளுடைய பார்வையில் உயிர் புனிதமானது. அதிலும், மனிதர்களுடைய உயிரை அவர் பொக்கிஷமாக நினைக்கிறார். (ஆதியாகமம் 9:6; சங்கீதம் 36:9) கருவில் இருக்கும் குழந்தையின் உயிரையும் அவர் அப்படித்தான் பார்க்கிறார். அதனால்தான், குழந்தை பத்திரமாக வளர்வதற்கு ஏற்ற விதத்தில் தாயின் கருப்பையை உருவாக்கியிருக்கிறார். “என் தாயின் கர்ப்பத்தில் என்னைத் திரைபோட்டு மறைத்தீர்கள்,” “நான் கருவாக இருந்தபோதே உங்கள் கண்கள் என்னைப் பார்த்தன. என்னுடைய உறுப்புகள் . . . ஒவ்வொன்றைப் பற்றியும், அவை உருவாகும் நாட்களைப் பற்றியும் உங்களுடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது” என்று ஒரு பைபிள் எழுத்தாளர் சொன்னார்.—சங்கீதம் 139:13, 16.
பிறவாத குழந்தையின் உயிரையும் கடவுள் உயர்வாக மதிக்கிறார் என்பதை இன்னும் இரண்டு விஷயங்களில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். (1) இஸ்ரவேலில் வாழ்ந்த தன்னுடைய மக்களுக்கு அவர் கொடுத்த சட்டம், (2) மனிதர்களுக்கு கடவுள் கொடுத்த மனசாட்சி. ஒரு கர்ப்பிணி பெண் தாக்கப்பட்டு அவளுடைய குழந்தை இறந்துபோனால், அதற்கு காரணமான அந்த நபருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கடவுள் கொடுத்த சட்டம் சொன்னது. (யாத்திராகமம் 21:22, 23) இருந்தாலும், என்ன நோக்கத்தோடு... எப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நபர் அதை செய்தார் என்பதையெல்லாம் வைத்து நீதிபதிகள் தீர்ப்பு கொடுக்க வேண்டியிருந்தது.—எண்ணாகமம் 35:22-24, 31.
மனிதர்களுக்கு கடவுள் மனசாட்சியைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். மனசாட்சி என்பது நமக்குள் இருக்கும் ஒரு உணர்வு. ஒரு பெண் தன் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, கருக்கலைப்பு செய்யாமல் இருந்தால் உயிருக்கு அவள் மதிப்பு கொடுக்கிறாள் என்று அர்த்தம். அப்போது, அவளுடைய மனசாட்சி அவளை தட்டிக்கொடுக்கும். * இல்லையென்றால், அவளுடைய மனசாட்சி அவளை தட்டிக்கேட்கும். (ரோமர் 2:14, 15) கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு கவலையும் மனச்சோர்வும் வர நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
“இப்போ குழந்தை பிறந்தா அத என்னால எப்படி நல்லபடியா வளர்க்க முடியும்?” என்று ஒருவர் பயப்படலாம். அதுவும், திட்டமிடாதபோது கர்ப்பமானால் அந்த பயம் அதிகமாகலாம். இந்த சூழ்நிலையிலும், ஒருவர் கடவுளுக்கு பிடித்ததை செய்தால் அவர் அவர்களை நிச்சயம் ஆசீர்வதிப்பார். ‘உண்மையுள்ளவரிடம் அவர் உண்மையுள்ளவராக நடந்துகொள்கிறார். குற்றமற்றவரிடம் அவர் குற்றமற்றவராக நடந்துகொள்கிறார்’ என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 18:25) அதுமட்டுமல்ல, “யெகோவா நியாயத்தை நேசிக்கிறார். அவருக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிட மாட்டார்” என்றும் சொல்கிறது.—சங்கீதம் 37:28.
“தங்களுடைய மனசாட்சி சொல்கிற சாட்சியை யோசித்துப் பார்த்து, தாங்கள் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள்.”—ரோமர் 2:15.
“நான் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்திருக்கிறேனே? கடவுள் என்னை மன்னிப்பாரா?”
மக்கள் என்ன சொல்கிறார்கள்
பிள்ளைகளை தனியாக வளர்த்து வரும் ரூத் என்ற பெண் இப்படி சொல்கிறார்: “எனக்கு ஏற்கெனவே மூணு பிள்ளைங்க. இதுல, இன்னொரு குழந்தைய என்னால வளர்க்க முடியாதுனு நினைச்சு கருவுலயே அத அழிச்சிட்டேன். நான் அப்படி கொடூரமா நடந்துகிட்டத நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு.” * ரூத் செய்த தவறை கடவுள் மன்னிப்பாரா?
பைபிள் என்ன சொல்கிறது
“நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் மனம் திருந்தும்படி அழைக்க வந்திருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். இதிலிருந்து, தவறு செய்த ஒருவரை கடவுள் எப்படி பார்க்கிறார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. (லூக்கா 5:32) ஆம், செய்த தவறை நினைத்து ஒருவர் உண்மையிலேயே வருத்தப்படும்போது... மனந்திரும்பும்போது... கடவுளிடம் மன்னிப்பு கேட்கும்போது... அது எவ்வளவு பெரிய தவறாக இருந்தாலும் சரி, கடவுள் அவரை தாராளமாக மன்னிப்பார். (ஏசாயா 1:18) “கடவுளே, உடைந்த உள்ளத்தையும் நொறுங்கிய நெஞ்சத்தையும் நீங்கள் ஒதுக்கித்தள்ள மாட்டீர்கள்” என்று சங்கீதம் 51:17 சொல்கிறது.
செய்த தவறை நினைத்து வேதனைப்படும் நபர் கடவுளிடம் உதவி கேட்கும்போது அவருக்கு மன அமைதியையும் சுத்தமான மனசாட்சியையும் கடவுள் தருகிறார். “உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் நன்றியோடுகூடிய ஜெபத்தின் மூலமும் மன்றாட்டின் மூலமும் கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் பாதுகாக்கும்” என்று பிலிப்பியர் 4:6, 7 சொல்கிறது. * பைபிளைப் படித்தது... மனதில் இருப்பதை எல்லாம் கடவுளிடம் கொட்டியது... ரூத்துக்கு ரொம்ப ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது. கடவுள் ‘மனதார மன்னிக்கிறவர்’ என்பதை ரூத் இப்போது புரிந்துகொண்டார்.—சங்கீதம் 130:4. ◼
“நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் [கடவுள்] நம்மை நடத்தவில்லை. நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை.”— சங்கீதம் 103:10.
^ தாயின் உயிருக்கோ அல்லது குழந்தையின் உயிருக்கோ ஆபத்து வரும் என்பதற்காக கருக்கலைப்பு செய்வது நியாயம் என்று சொல்லிவிட முடியாது. குழந்தை பிறக்கும் சமயத்தில், ஒரு உயிரைதான் காப்பாற்ற முடியும் என்று டாக்டர்கள் சொன்னால், அப்போது என்ன செய்ய வேண்டும் என்று அந்த தம்பதிதான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், இப்படிப்பட்ட நிலைமை இன்று குறைந்திருக்கிறது. ஏனென்றால், வளர்ந்த நாடுகளில் மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது.
^ பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.
^ இறந்தவர்களை கடவுள் உயிரோடு கொண்டுவருவார் என்ற நம்பிக்கைகூட ஒருவருக்கு மன நிம்மதியை தரும். தாயின் வயிற்றிலுள்ள குழந்தை இறந்துவிட்டால் அது உயிர்த்தெழுப்பப்படுமா என்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று ஏப்ரல் 15, 2009, காவற்கோபுரத்தில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியில் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.