உயிர் உதிரும்போது...
வேதனை மறைய வேதமே மருந்து
அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுக்கும்போது ஏற்படும் வேதனையைப் பற்றி சமீப காலமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், நாம் ஏற்கெனவே பார்த்தபடி, நிபுணர்கள் கொடுக்கிற மிகச் சிறந்த ஆலோசனைகள் ரொம்பக் காலத்துக்கு முன்பு பைபிளில் சொல்லப்பட்ட ஞானமான ஆலோசனைகளோடு பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. அப்படியென்றால், எல்லா காலத்துக்கும் பொருந்துகிற ஆலோசனைகளைத்தான் பைபிள் தருகிறது என்பது தெளிவாகிறது. அது நம்பகமான ஆலோசனைகளைத் தருவதோடு, வேறு எங்குமே சொல்லப்படாத முக்கியமான விஷயங்களையும் சொல்கிறது. அந்த விஷயங்கள் துக்கத்தில் தவிக்கிறவர்களுக்கு அளவில்லாத ஆறுதலைத் தருகின்றன.
-
இறந்தவர்கள் எந்த வேதனையும் அனுபவிப்பது இல்லை
“இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது” என்று பிரசங்கி 9:5 சொல்கிறது. “அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.” (சங்கீதம் 146:4) அதனால்தான், மரணத்தை நிம்மதியான தூக்கத்தோடு பைபிள் ஒப்பிட்டுப் பேசுகிறது.—யோவான் 11:11.
-
அன்பான கடவுளை முழுமையாக நம்புகிறவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்
“யெகோவாவின் * கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 34:15) நம் மனதில் இருப்பதையெல்லாம் கடவுளிடம் சொல்வது வெறுமனே மனக் காயத்துக்கு மருந்தாக இருக்கிறது என்றோ, யோசனைகளைக் கட்டுப்படுத்த மட்டும் உதவுகிறது என்றோ சொல்ல முடியாது. நம்மைப் படைத்த கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ளவும் அது உதவுகிறது. அவர் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி நமக்கு ஆறுதல் தருவார்.
-
சந்தோஷமான எதிர்காலம் காத்திருக்கிறது
இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: சீக்கிரத்தில், இறந்தவர்கள் மறுபடியும் இந்தப் பூமியில் உயிரோடு வருவார்கள்! அப்படிப்பட்ட ஒரு காலத்தைப் பற்றி பைபிள் அடிக்கடி சொல்கிறது. அப்போது பூமியில் நிலைமைகள் எப்படி இருக்கும் என்றுகூட அது சொல்கிறது: “[நம்முடைய] கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
கடவுளாகிய யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறவர்கள், இறந்துபோன தங்களுடைய அன்பானவர்களை மறுபடியும் பார்க்க முடியும் என்று நம்புகிறார்கள். அதனால், மரணத்தின் வலியை அவர்களால் நன்றாகச் சமாளிக்க முடிகிறது. உதாரணத்துக்கு, ஆலிஸ் என்ற பெண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். கல்யாணமாகி 65 வருஷங்களுக்குப் பிறகு அவருடைய கணவர் இறந்துவிட்டார். அந்த வேதனையை அவர் எப்படிச் சமாளிக்கிறார் என்று அவரே சொல்கிறார்: “இறந்தவங்க எந்த வேதனையும் அனுபவிக்கறது இல்லனு பைபிள் சொல்லுது, கடவுள் தன்னோட ஞாபகத்துல இருக்கிற எல்லாரையும் மறுபடியும் உயிரோட கொண்டு வருவாருன்னும் பைபிள் சொல்லுது. இந்த விஷயங்கள்தான் எனக்கு நம்பிக்கை தருது. என் கணவர பத்தி ஞாபகம் வந்தாலே இதத்தான் யோசிச்சு பார்ப்பேன். அதனாலதான், இவ்வளவு பெரிய இடி என் தலைமேல விழுந்தும் என்னால இன்னும் தாக்குப்பிடிக்க முடியுது!”
முதல் கட்டுரையில் நாம் பார்த்த டீனா என்ன சொல்கிறார் தெரியுமா? “என் கணவர் இறந்த நாள்ல இருந்து, கடவுள்தான் எனக்கு துணையா இருந்திருக்காரு. நான் வேதனையில சுருண்டுபோன ஒவ்வொரு சமயத்துலயும் யெகோவாதான் என்னை தூக்கி நிறுத்துனாருன்னு என்னால உறுதியா சொல்ல முடியும். இறந்தவங்க மறுபடியும் உயிரோட வருவாங்கன்னு பைபிள் கொடுக்கிற வாக்குறுதிய நான் முழுசா நம்புறேன். மறுபடியும் என் கணவர பார்க்கப்போற அந்த நாள்வரைக்கும் இந்த நம்பிக்கையிலதான் என் வாழ்க்கைய ஓட்டுவேன்” என்று சொல்கிறார்.
இவர்களைப் போலவே இன்னும் லட்சக்கணக்கானவர்கள், பைபிள் சொல்வதெல்லாம் உண்மை என்று முழுமையாக நம்புகிறார்கள். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பைபிள் சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை அல்லது கற்பனை என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், பைபிள் தரும் ஆலோசனைகளையும் வாக்குறுதிகளையும் ஏன் நம்பலாம் என்பதற்கான அத்தாட்சிகளை நீங்களே ஏன் ஆராய்ந்து பார்க்கக் கூடாது? அப்போது, அன்பானவர்களை இழந்து தவிக்கிறவர்களுக்கு பைபிள் எந்தளவுக்கு உதவி செய்கிறது என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
இறந்தவர்களின் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள்
இது சம்பந்தப்பட்ட வீடியோக்களை jw.org என்ற எங்களுடைய வெப்சைட்டில் பாருங்கள்
இறந்தவர்கள் என்ன நிலைமையில் இருக்கிறார்கள்?
இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது? இதற்கு பைபிள் தரும் தெளிவான பதில் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது
லைப்ரரி > வீடியோக்கள் என்ற தலைப்பில் பாருங்கள் (அதில்: பைபிள்)
சந்தோஷமான செய்தியைக் கேட்க ஆசைப்படுகிறீர்களா?
இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் கெட்ட செய்தியைத்தான் கேட்க முடிகிறது, நல்ல செய்திக்கு எங்கே போவது?
பைபிள் போதனைகள் > நிம்மதியும் சந்தோஷமும் என்ற தலைப்பில் பாருங்கள்
^ பாரா. 7 யெகோவா என்பதுதான் கடவுளுடைய பெயர் என்று பைபிள் சொல்கிறது.