உறவும் நட்பும் இனிக்க . . .
உறவும் நட்பும் அறுந்துவிடாமல் பார்த்துகொள்வது பலருக்குப் பெரும்பாடாக இருக்கிறது. உறவுகளை உறுதியாக வைத்துக்கொள்ள உதவும் சில பைபிள் ஆலோசனைகள் இதோ . . .
சுயநலத்தை விட்டுவிடுங்கள்
பைபிள் ஆலோசனை: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:4.
இதன் அர்த்தம் என்ன? மற்றவர்களிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றி யோசிக்காமல், மற்றவர்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்று யோசித்தால்... உறவுகள் உறுதியாகும். சுயநலமாக இருந்தால், உறவுகள் சீக்கிரம் அறுந்துவிடும். உதாரணத்துக்கு, சுயநலமாக இருக்கிற ஒரு கணவரோ, மனைவியோ தன் துணைக்குத் துரோகம் செய்துவிடலாம். அதுமட்டுமல்ல, தன்னுடைய வசதிவாய்ப்புகளையும் அருமைபெருமைகளையும் பற்றியே சதா தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிற ஆட்களிடம் யாரும் நெருங்கவே மாட்டார்கள். அதனால்தான், ‘சுயநலவாதிகளின் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரிசைகட்டி நிற்கும்” என்று ஒரு புத்தகம் சொல்கிறது.
நீங்கள் என்ன செய்யலாம்?
-
உதவிக்கரம் நீட்டுங்கள். நல்ல நண்பர்கள் ஒருவரை ஒருவர் நம்புவார்கள், உதவி செய்ய ஓடோடி வருவார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்கிற பழக்கம் உள்ளவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் மனச்சோர்வு வராது. அதற்குப் பதிலாக, அவர்களுடைய சுயமரியாதை கூடும் என்று சில ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
-
அனுதாபம் காட்டுங்கள். மற்றவர்களின் வலியை நம் இதயத்தில் உணர்வதுதான் அனுதாபம். இந்தக் குணம் இருந்தால் நக்கலாகவோ குத்தலாகவோ பேச மாட்டீர்கள். நறுக் நறுக்கென்ற வார்த்தைகளால் மற்றவர்களின் மனதைக் காயப்படுத்த மாட்டீர்கள்.
அனுதாபம் இருந்தால், மற்றவர்களோடு ஒத்துப்போவீர்கள். வேறு கலாச்சாரத்தையோ பின்னணியையோ சேர்ந்தவர்களை ஒதுக்க மாட்டீர்கள். உங்கள் நட்பு வட்டத்தில் அவர்களையும் சேர்த்துக்கொள்வீர்கள்.
-
நேரத்தைக் கொடுங்கள். மற்றவர்களோடு நீங்கள் எந்தளவு நேரம் செலவு செய்கிறீர்களோ, அந்தளவு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிற விஷயங்களைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். அப்போதுதான் அவர்களோடு நல்ல நண்பர்களாக முடியும். நண்பர்கள் அவர்களுடைய கஷ்டநஷ்டங்களைப் பற்றிச் சொல்லும்போது காதுகொடுத்து கேளுங்கள். “நண்பர்களோடு மனம் திறந்து பேசுகிறவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்” என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி சொல்கிறது.
நண்பர்களைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுங்கள்
பைபிள் ஆலோசனை: “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கநெறிகளை கெடுத்துவிடும்.” —1 கொரிந்தியர் 15:33, அடிக்குறிப்பு.
இதன் அர்த்தம் என்ன? நீங்கள் யாரோடு அதிகமாகப் பழகுகிறீர்களோ, அவர்களை மாதிரியே ஆகிவிடுவீர்கள். நீங்கள் நல்ல ஆட்களோடு பழகினால், அவர்களுடைய நல்ல பழக்கங்கள் உங்களுக்கு வரும். கெட்ட ஆட்களோடு பழகினால், அவர்களுடைய கெட்ட பழக்கங்கள் உங்களைத் தொற்றிக்கொள்ளும். நண்பர்கள் ஒருவருடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதை சமூகவியலாளர்கள் (Sociologists) ஒத்துக்கொள்கிறார்கள். உதாரணத்துக்கு, உங்களோடு பழகுகிறவர்கள் புகைபிடிக்கிறவர்களாக இருந்தால்... விவாகரத்து செய்தவர்களாக இருந்தால்... நீங்களும் சீக்கிரத்தில் புகைபிடிக்க ஆரம்பித்துவிடலாம், விவாகரத்து செய்வதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துவிடலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்? உங்களுக்குப் பிடித்த குணங்கள்... நீங்கள் பின்பற்ற நினைக்கிற குணங்கள்... யாருக்கு இருக்கிறதோ, அப்படிப்பட்டவர்களோடு நண்பராகுங்கள். உதாரணத்துக்கு, சாதுரியமாக, மரியாதையாக நடந்துகொள்கிறவர்கள்... தாராள குணமுள்ளவர்கள்... உபசரிக்கிறவர்கள்... இப்படிப்பட்டவர்களோடு பழகுங்கள்.
இன்னும் சில பைபிள் ஆலோசனைகள்
புண்படுத்துகிற மாதிரி பேசாதீர்கள்.
“யோசிக்காமல் பேசுவது வாள் போலக் குத்தும்.”—நீதிமொழிகள் 12:18.
தாராளமாகக் கொடுங்கள்.
“தாராள குணமுள்ளவன் செழிப்பான்.”—நீதிமொழிகள் 11:25.
மற்றவர்கள் உங்களுக்குச் செய்ய விரும்புவதை நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.
“மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”—மத்தேயு 7:12.