இயற்கை எதைக் கற்பிக்கிறது?
இயற்கை எதைக் கற்பிக்கிறது?
“நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும். ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும். அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.” —யோபு 12:7, 8.
சமீபத்திய ஆண்டுகளில் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும், தாவரங்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நிறைய விஷயங்களைக் கற்றிருக்கிறார்கள். அவற்றின் வடிவமைப்பை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் புதிய பொருள்களை உருவாக்குகிறார்கள். அதுமட்டுமின்றி ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வரும் கருவிகளின் செயல்பாட்டில் முன்னேற்றமும் செய்கிறார்கள். இத்துறை, பையோமிமெடிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பின்வரும் உதாரணங்களைக் குறித்துச் சிந்திக்கையில், ‘இந்த வடிவமைப்புகளுக்கான பாராட்டு அனைத்தும் யாருக்கு உரியது?’ என்ற கேள்வியை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
திமிங்கலத்தின் துடுப்புகள் கற்பிப்பதென்ன?
விமானங்களை வடிவமைப்போர், திமில் முதுகுத் திமிங்கலங்களிடம் (humpback whale) இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒன்றா, இரண்டா, நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். முழு வளர்ச்சியடைந்த திமிங்கலத்தின் எடை சுமார் 30 டன்; அதாவது முழு லோடு ஏற்றப்பட்ட லாரியின் எடைக்குச் சமமாகும். இதற்கு ஓரளவு விறைப்பான உடலும், பெரிய இறக்கைகள் போன்ற துடுப்புகளும் இருக்கின்றன. 12 மீட்டர் நீளத்திற்கு இது வளர்கிறது. தண்ணீருக்கடியில் படு வேகமாக நீந்துகிறது. உதாரணமாக, நண்டு, நத்தை போன்றவற்றையோ மீனையோ பார்த்துவிட்டால் இது என்ன செய்யும், தெரியுமா? தண்ணீருக்கடியில் சிறிய வட்டமாகச் சுழன்று சுழன்று நீந்திக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மேல்நோக்கி வரும். அச்சமயத்தில் நீர்க் குமிழிகளை வெளியிடும். இப்படி வட்ட வடிவில் சேர்ந்துவிடும் நீர்க் குமிழிகள் ஒரு வலை போல இருக்கின்றன. இந்த வட்டத்தின் குறுக்களவு குறைந்தபட்சம் 1.5 மீட்டர் இருக்கும். இந்த நீர்க்குமிழி வலைக்குள் சிக்குபவற்றை திமிங்கலம் லபக்கென்று விழுங்கிவிடும்.
இதன் உடலோ விறைப்பாக இருக்கும். அப்படியிருந்தும், அத்தனைச் சிறிய வட்டத்திற்குள் சுழன்று சுழன்று அவற்றால் நீந்த முடிவதைக் கண்டு ஆராய்ச்சியாளர்கள் அசந்து போனார்கள். இவற்றின் துடுப்புகளின் வடிவமைப்புதான் அதற்குக் காரணம் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்தத் துடுப்புகளின் முன்புறத்திலுள்ள விளிம்புப் பகுதி, விமானத்தின் இறக்கைகள்போல வழுவழுப்பானவை அல்ல. மாறாக, ரம்பப் பற்கள் போன்ற அமைப்பைக் கொண்டவை.
அவற்றை ட்யூபர்கில்ஸ் என்று அழைக்கிறார்கள்.திமிங்கலம் தண்ணீரில் வேகமாக நீந்தும்போது, மேல்நோக்கி எழும்ப ட்யூபர்கில்ஸ் உதவுகிறது. அதோடு, தண்ணீரின் எதிர்ப்பு விசையைக் குறைக்கிறது. எப்படி? இயற்கை சரித்திரம் என்ற ஆங்கில பத்திரிகை இதற்கான விளக்கத்தை அளிக்கிறது. ட்யூபர்கில்ஸ், திமிங்கலத்தின் துடுப்புகளுக்கு மேல் தண்ணீரை வேகமாகச் சுழல வைக்கிறது. திமிங்கலம் செங்குத்தாக மேலே எழும்புகையிலும் இவ்வாறே நடக்கிறது. துடுப்புகளின் முன்புற விளிம்புகள் வழுவழுப்பாக இருந்தால் திமிங்கலத்தால் இவ்வளவு வேகமாக சுழன்று சுழன்று மேலே எழும்ப முடியாது. காரணம், துடுப்புகளின் பின்னால் தண்ணீர் சுழல்வதால் திமிங்கலம் மேலே எழும்பாதபடி அது தடுத்துவிடும்.
இந்தக் கண்டுபிடிப்பு நடைமுறையில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம்? இதை அடிப்படையாக வைத்து விமானங்களை வடிவமைக்கையில் விமான இறக்கைகளோடு இணைக்கப்பட்டிருக்கும் அகல் தொங்கல் பகுதிகளும் (wing flaps) காற்றின் வேகத்தை மாற்றத் தேவைப்படும் மற்ற கருவிகளும் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலே போதுமானதாக இருக்கும். இப்படிப்பட்ட இறக்கைகள் பாதுகாப்பானவை, பராமரிக்க எளிதானவை. சீக்கிரத்திலேயே ஒருநாள் “திமில் முதுகு திமிங்கலத்தின் துடுப்புகளில் இருக்கும் பற்கள் போன்ற அமைப்பை ஒவ்வொரு விமானத்திலும் காணமுடியும்” என்று பயோமெகானிக்ஸ் வல்லுநர் ஜான் லாங் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
கடற்காக்கைகளின் இறக்கைகளை காப்பியடித்தல்
ஏற்கெனவே பறவைகளின் இறக்கைகளை காப்பியடித்துத்தான் விமானத்தின் இறக்கைகளை வடிவமைத்திருக்கிறார்கள். என்றாலும், சமீப நாட்களில் பொறியாளர்கள் இவ்விஷயத்தில் இன்னுமதிகமாக பறவைகளை காப்பியடிக்கத் தொடங்கியுள்ளனர். “ப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானத்தைத் தயாரித்துள்ளனர். அது ஒரு கடற்காக்கையைப் போலவே வட்டமிட்டு, சர்ரென்று கீழிறங்கி, அதே வேகத்தில் மேலெழும்பும் திறனைக் கொண்டது” என்று நியு சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது.
கடற்காக்கைகள் அவற்றின் இறக்கைகளை முன் பகுதியிலும் தோள்பட்டைப் பகுதியிலும் மடக்க முடிவதால், அவற்றால் வான்வெளியில் பல்வேறு சாகசங்கள் புரிய முடிகிறது. கடற்காக்கைகளின் இறக்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட “மேற்சொல்லப்பட்ட விமானம் 24 அங்குல நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள மோட்டார் இதன் இறக்கைகளை அசையச் செய்யும் உலோகத் துண்டுகளை இயக்குகிறது” என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. இப்படிப் புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்ட இறக்கைகளின் உதவியோடு இச்சிறிய விமானத்தால் உயரமான கட்டடங்களுக்கு இடையே வட்டமிடவும், தலைகுப்புற டைவ் அடிக்கவும் முடிகிறது. அமெரிக்க விமானப் படை இதுபோன்ற விமானத்தைத் தயாரிக்க ஆர்வம் காட்டுகிறது. பெருநகரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரசாயன, உயிரியல் ஆயுதங்களைத் தேடுவதற்கு இவற்றைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.
பல்லியின் பாதத்தை காப்பியடித்தல்
நிலவாழ் உயிரினங்களிடமிருந்தும் மனிதர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. உதாரணமாக, பல்லியால் சுவர்களில் ஏறவும், மேற்கூரையில் தலைகீழாக நடக்கவும் முடியும். பல்லிக்கு இருக்கிற இந்தத் திறன், பைபிள் காலங்களில்கூட நன்கு அறியப்பட்டிருந்தது. (நீதிமொழிகள் 30:28, NW) புவியீர்ப்பு விசையை எதிர்த்துச் செயல்பட அவற்றால் எப்படி முடிகிறது?
பல்லியின் பாதமெங்கும் நுண்ணிய கொக்கி போன்ற அமைப்புகள் உள்ளன. இவற்றின் உதவியால்தான் வழுவழுப்பான தளங்களில்கூட அவற்றால் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நிற்க முடிகிறது. இப்படி நிற்பதற்காக, அவற்றின் பாதத்தில் பிசின் எதுவும் சுரப்பதில்லை. மாறாக, நுட்பமான மூலக்கூறு விசையே அவற்றுக்கு உதவுகிறது. பல்லியின் பாதங்களிலும் சுவற்றிலும் இருக்கிற மூலக்கூறுகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்கின்றன. வான்டர் வால்ஸ் விசை என்றழைக்கப்படும் வலுக்குறைவான ஈர்ப்பு விசையின் காரணமாகவே இது சாத்தியமாகிறது. பொதுவாக, இந்த விசையைவிட புவியீர்ப்புச் சக்தி அதிக வலிமையானது. அதனால்தான் நம் கைகளைச் சுவற்றில் வைத்து நம்மால் ஏற முடியாமல் போகிறது. ஆனால், ஏராளமான இந்த நுண்கொக்கிகள் காரணமாக, பல்லியின் பாதம் சுவற்றில் படும் பரப்பளவு அதிகமாகிறது. ஆயிரக்கணக்கான இந்த நுண்கொக்கிகளால் உண்டாகும் வான்டர் வால்ஸ் விசை, இந்தச் சிறிய பல்லி சுவற்றோடு ஒட்டிக்கொள்ளத் தேவையான விசையை உண்டாக்குகிறது.
இந்தக் கண்டுபிடிப்பால் ஏதேனும் பிரயோஜனமுண்டா? பல்லியின் பாதங்களை காப்பியடித்து உருவாக்கப்படுகிற செயற்கைப் பொருட்கள் வெல்க்ரோவிற்குப் பதிலாக பயன்படுத்தப்படலாம். வெல்க்ரோவும்கூட இயற்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு பொருள்தான். a பல்லியினுடைய பாதத்தின் வடிவமைப்பை அடிப்படையாக வைத்து செயற்கையாக ஒருவித டேப் தயாரிக்கப்பட்டது. அதைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள்கள் “மருத்துவத்தில்” பெருமளவு பயனுள்ளவையாக இருக்கும். “குறிப்பாக, ரசாயன பிசின்கள் பயன்படுத்தப்பட முடியாத சந்தர்ப்பத்தில் இவற்றைப் பயன்படுத்தலாம்” என்று ஓர் ஆராய்ச்சியாளர் சொன்னதாக தி இகானமிஸ்ட் பத்திரிகை தெரிவிக்கிறது.
பாராட்டு யாருக்கு உரியது?
தேளைப் போன்று நடக்கும் எட்டுக் கால் ரோபாட் ஒன்றை “நாஸா” விஞ்ஞானிகள் வடிவமைத்து வருகிறார்கள். பின்லாந்து நாட்டுப் பொறியாளர்கள் ஆறு கால் கொண்ட ட்ராக்டர் ஒன்றை ஏற்கெனவே உருவாக்கிவிட்டார்கள். ஒரு ராட்சஸ பூச்சியைப் போலவே இந்த ட்ராக்டர் வழியில் இருக்கும் தடைகள் மீதெல்லாம் ஏறிச் செல்லும் திறனுடையது. மற்ற ஆராய்ச்சியாளர்கள், ஊசியிலை மரக் கூம்புகள் திறந்து மூடும் முறையை அடிப்படையாக வைத்து சில துணி வகைகளை வடிவமைத்துள்ளனர். பாக்ஸ் மீனின் வழுக்கிச்செல்லும் அமைப்பைப் பார்த்து அதைப் போன்ற வண்டிகளை ஒரு கார் உற்பத்தியாளர் உருவாக்கி வருகிறார். லேசான, அதேசமயத்தில் உறுதியான உடல் கவசத்தை உருவாக்குவதற்காக சில ஆராய்ச்சியாளர்கள் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய அபலோன் நத்தைகளின் ஓடுகளை ஆராய்ந்து வருகிறார்கள்.
இவ்வாறு, அபாரமான ஐடியாக்களை இயற்கை அள்ளித் தந்துள்ளது. இதுபோன்ற ஆயிரக்கணக்கான உயிரியல் அமைப்பு பற்றிய விவரங்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது தகவல் வங்கியில் சேகரித்து வைத்துள்ளனர். விஞ்ஞானிகள், “வடிவமைப்பதில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு இயற்கை அளிக்கும் பதில்களை” இதிலிருந்து தேடிக் கண்டுபிடிக்கலாம் என்பதாக தி இகானமிஸ்ட் பத்திரிகை சொல்கிறது. இந்தத் தகவல் வங்கியில் இருக்கும் இயற்கை அமைப்புகள், “உயிரியல் காப்புரிமைகள்” என்று அழைக்கப்படுகின்றன. பொதுவாக, புதியதோர் ஐடியாவை அல்லது கருவியை சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யும் நபரோ நிறுவனமோ தான் காப்புரிமையைப் பெற முடியும். உயிரியல் காப்புரிமை வங்கி பற்றி தி இகானமிஸ்ட் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “இயற்கையிலிருந்து பெற்றுக்கொண்ட அபாரமான ஐடியாக்களை ‘உயிரியல் காப்புரிமைகள்’ என்று அழைப்பதன் மூலம் இயற்கைதான் உண்மையான காப்புரிமையாளர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தவே செய்திருக்கிறார்கள்.”
இயற்கைக்கு இத்தனை அற்புதமான ஐடியாக்கள் எங்கிருந்து வந்தன? இத்தனை அருமையான வடிவமைப்புகள் அனைத்தும் லட்சக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்த பரிணாமத்தின் மூலமாய் வந்ததாக அநேக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால், மற்ற ஆராய்ச்சியாளர்கள் வேறு விதமான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நுண்ணுயிரியல் வல்லுநரான மைக்கேல் பீஹீ 2005-ல், த நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையில் இவ்வாறு எழுதினார்: “[இயற்கையில்] தெளிவாகக் காணப்படும் வடிவமைப்பு, நம்பத்தக்க எளிய கருத்தைத் தெரிவிக்கிறது: ஆங்கில பழமொழி ஒன்று கூறுவது போல, அது பார்ப்பதற்கு வாத்து மாதிரியே இருந்தால், வாத்து மாதிரியே நடந்தால், வாத்து மாதிரியே கத்தினால், அது வாத்துதான் என தாராளமாக முடிவு செய்யலாம்; அதாவது, அதை மறுப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில்.” அவரது முடிவு? “ஒரு பொருளைப் பார்க்கையில் அது வடிவமைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரியும்போது, அந்த உண்மையை மறுப்பது நியாயமல்ல.”
பாதுகாப்பான, செயல்திறன் கொண்ட விமான இறக்கையை வடிவமைக்கும் பொறியாளர் அதற்கான பாராட்டைப் பெறத் தகுந்தவர். பலவிதத்தில் பயன்படக்கூடிய பேண்டேஜையோ, சௌகரியமான துணிவகையையோ, அதிகத் திறன் கொண்ட மோட்டார் வாகனத்தையோ வடிவமைப்பவரும் அதற்காகப் பாராட்டைப் பெறத் தகுந்தவர். ஆனால் வேறொருவரது ஐடியாவை காப்பியடித்துவிட்டு, தானே அதைக் கண்டுபிடித்ததாக உரிமை கொண்டாடுபவர் நிச்சயம் ஒரு குற்றவாளியாகவே கருதப்படுவார்.
திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய கருவிகளை வடிவமைக்கையில் அரைகுறையாகத்தான் இயற்கையை காப்பியடிக்கிறார்கள். இருந்தாலும், வடிவமைப்பதில் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் வடிவமைத்த புத்திக்கூர்மையுள்ள படைப்பாளரை கௌரவிப்பதற்குப் பதிலாக, புத்திக்கூர்மையற்ற பரிணாமத்தை அவர்கள் ஆதரிப்பது நியாயமாகுமா? ஓர் ஐடியாவை காப்பியடிக்கவே புத்திக்கூர்மையுள்ள நபர் தேவைப்படும்போது, ஒரிஜினல் ஐடியா மட்டும் தானாக எப்படி வந்திருக்கும்?
அப்படியானால், யாரை அதிகமாகப் பாராட்ட வேண்டும், எல்லாவற்றையும் வடிவமைத்த படைப்பாளரையா? அல்லது அதை காப்பியடிக்கும் மனிதர்களையா?நியாயமான முடிவு
இயற்கையிலுள்ள பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரங்களை எல்லாம் கவனித்தபிறகு, ஆழ்ந்து யோசிக்கும் மக்கள் சங்கீதக்காரன் கூறிய பின்வரும் வார்த்தைகளை ஒத்துக்கொள்கிறார்கள்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 104:24) பைபிள் எழுத்தாளரான பவுலும் இதை ஒத்துக்கொண்டார். அவர் இவ்வாறு கூறினார்: “காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.”—ரோமர் 1:19, 20.
என்றாலும், பைபிளை மதிக்கிற, கடவுளை நம்புகிற உண்மையுள்ள ஆட்கள் அநேகர், பரிணாமத்தைப் பயன்படுத்தி இயற்கையிலுள்ள அற்புதங்களை கடவுள் படைத்திருக்க வேண்டும் என்பதாக வாதிடுகிறார்கள். இதைப் பற்றி பைபிள் என்ன கற்பிக்கிறது?
[அடிக்குறிப்பு]
a வெல்க்ரோ என்பது, கொக்கி-வளைய அமைப்புடைய டேப் ஆகும். புர்டாக் செடியின் விதைகளைப் பார்த்து இது வடிவமைக்கப்பட்டது.
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
இயற்கையில் இத்தனை அற்புதமான ஐடியாக்கள் எப்படி வந்தன?
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
இயற்கையின் காப்புரிமையாளர் யார்?
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
ஓர் ஐடியாவை காப்பியடிக்கவே புத்திக்கூர்மையுள்ள நபர் தேவைப்படும்போது, ஒரிஜினல் ஐடியா மட்டும் தானாக எப்படி வந்திருக்கும்?
சாகசங்கள் புரியும் இந்த விமானம் கடற்காக்கையின் இறக்கையைப் பார்த்து வடிவமைக்கப்பட்டது
பல்லியின் பாதத்தில் அழுக்கு படிவதில்லை, பாதத்தடங்கள் ஏற்படுவதில்லை, டெஃப்லானைத் தவிர எல்லா பரப்புகளிலும் ஒட்டிக்கொள்ளும், பாதங்களை வைப்பதும் எடுப்பதும் இதற்கு வெகு சுலபம். இதை காப்பியடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள்
பாக்ஸ் மீனின் வழுக்கிச்செல்லும் அமைப்பு, வண்டியை வடிவமைப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தது
[படங்களுக்கான நன்றி]
விமானம்: Kristen Bartlett/ University of Florida; பல்லியின் பாதம்: Breck P. Kent; பாக்ஸ் மீனும் காரும்: Mercedes-Benz USA
[பக்கம் 8-ன் பெட்டி/படம்]
இயல்புணர்வால் ஞானமுள்ள பயணிகள்
அநேக உயிரினங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கையில் வழியை எப்படிக் கண்டுபிடிக்கின்றன? அவை ‘இயல்புணர்வால் ஞானமுள்ளவையாக இருப்பதாலேயே.’ (நீதிமொழிகள் 30:24, 25, NW) இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
◼ எறும்புகளின் போக்குவரத்து உணவைத் தேடிச் செல்லும் எறும்புகள் தங்கள் புற்றுக்குச் சரியாக வந்து சேருவது எப்படி? அவை மோப்பத் தடங்களை விட்டுச் செல்கின்றன. அதுமட்டுமின்றி தங்கள் ‘வீட்டிற்கு’ சரியாகச் சென்று சேருவதற்காக சில எறும்புகள் வடிவ கணித அடிப்படையில் பாதைகளை அமைப்பதாக பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். உதாரணமாக, ஃபாரோ எறும்புகள் “தங்கள் புற்றிலிருந்து செல்கையில், 50 டிகிரியிலிருந்து 60 டிகிரி வரையான கோணத்தில் பிரியும் பாதைகளை வழிநெடுக அமைக்கின்றன” என்று நியு சயன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. இந்த வடிவத்தில் என்ன விசேஷம்? ஓர் எறும்பு தன் புற்றுக்குத் திரும்பி வரும்போது, பாதை எங்கெல்லாம் இரண்டாகப் பிரிகிறதோ, அங்கெல்லாம் குறைவான கோணத்தில் அமைந்துள்ள பாதையிலேயே பயணிக்கிறது. இவ்வாறாக பத்திரமாய் வீடுபோய்ச் சேருகிறது. அதற்கு இருக்கும் இயல்புணர்வாலேயே இவ்வாறு செய்கிறது. “வடிவ கணிதத்தின் அடிப்படையில் எறும்புகள் பாதைகளைப் பிரிக்கின்றன. இதுபோன்ற பாதைகள் அவை திறம்பட்ட விதத்தில் பயணிக்க உதவுகின்றன. அதுவும், எறும்புகள் எதிரெதிராகப் பயணிக்கையில் இவை ரொம்பவே உதவியாக இருக்கின்றன. எறும்புகள் தவறான திசையில் சென்று சக்தியை விரயமாக்குவதை இவை தடுக்கின்றன” என்றும் அந்தக் கட்டுரை சொல்கிறது.
◼ பறவை திசைமானிகள் அநேக பறவைகள் நீண்ட தூரத்திற்குத் துல்லியமாக பயணிக்கின்றன. எல்லாவித சீதோஷண நிலையிலும் அவை பயணிக்கின்றன. இது எப்படிச் சாத்தியமாகிறது? பறவைகளால் பூமியின் காந்தப்புலத்தை உணரமுடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். என்றாலும், “பூமியின் காந்தப்புல கோடுகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன, அவை எப்போதும் நிஜ வடக்குத் திசை நோக்கியே இருப்பதில்லை” என்று சயன்ஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. இப்படியிருக்க, இடப்பெயர்ச்சி செய்யும் பறவைகள் சரியான திசையை எப்படிக் கண்டுபிடிக்கின்றன? பறவைகள் ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து அதன்படி தங்களுக்குள் இருக்கும் திசைமானியைச் சரிசெய்து கொள்வதுபோல் தெரிகிறது. சூரியனின் அஸ்தமன நிலை அட்சரேகையையும் பருவ காலத்தையும் பொறுத்து மாறுபடுகிறது. ஆகவே, இந்த மாற்றங்களுக்கு ஏற்ப பயணிப்பதற்கு, பறவைகளுக்குள் இருக்கும் “உயிரியல் கடிகாரம் பருவகாலத்தைச் சரியாகத் தெரிவிக்கிறது” என்று ஆராய்ச்சியாளர்கள் நினைப்பதாகவும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.
வடிவ கணிதத்தை எறும்புகளுக்கு சொல்லிக் கொடுத்தது யார்? திசைமானியையும், உயிரியல் கடிகாரத்தையும், அவற்றின் தகவல்களைப் புரிந்துகொள்ள உதவும் மூளையையும் பறவைகளுக்குக் கொடுத்தது யார்? புத்திக்கூர்மையற்ற பரிணாமமா? அல்லது புத்திக்கூர்மையுள்ள படைப்பாளரா?
[படத்திற்கான நன்றி]
© E.J.H. Robinson 2004