Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

ஆபாசம்

ஆபாசம்

ஆபாசத்தை பைபிள் கண்டனம் செய்கிறதா?

“காம உணர்வோடு ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டே இருக்கும் எவனும் அவளுடன் ஏற்கெனவே தன் இருதயத்தில் தவறான உறவுகொண்டுவிடுகிறான்.” —மத்தேயு 5:28.

பதிலை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

என்றும் இல்லாத அளவுக்கு இன்று எங்கும் ஆபாசம், எதிலும் ஆபாசம்! கடவுளுக்குப் பிரியமாக, சந்தோஷமாக வாழ ஆசைப்படுகிறீர்களென்றால், ஆபாசத்தைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

பைபிளின் கருத்து

ஆபாசத்தைப் பார்ப்பது பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. என்றாலும், அது அநேக பைபிள் நெறிமுறைகளுக்கு நேரெதிராக இருக்கிறது.

உதாரணத்திற்கு, மணமான ஒருவர் தன் துணையல்லாத வேறொரு பெண்ணை ‘காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருந்தால்,’ அவளோடு தகாத உறவுகொள்ளத் தூண்டப்படலாம் என்று பைபிள் எச்சரிக்கிறது. இந்த வசனத்திலுள்ள நெறிமுறை, காம உணர்வோடு ஆபாசப் படங்களை ‘பார்த்துக்கொண்டே இருக்கிற’ மணமானவருக்கும் சரி, மணமாகாதவருக்கும் சரி பொருந்தும். ஆபாசத்தைப் பார்ப்பது நிச்சயமாகவே கடவுளுக்கு அருவருப்பானது!

ஒழுக்கக்கேட்டில் ஈடுபடாவிட்டால்கூட ஆபாசத்தைப் பார்ப்பது தவறா?

“பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, காமப்பசி, தீய ஆசை, . . . பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்கள் உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:5.

மக்களின் கருத்து ஆபாசத்தைப் பார்ப்பதற்கும் ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதற்கும் சம்பந்தமில்லை எனச் சில ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். அது உண்மை என்றால்கூட, ஆபாசத்தைப் பார்ப்பது தவறா?

 

பைபிளின் கருத்து

‘ஆபாசமான கேலிப் பேச்சு’ தகாதது என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:3, 4) அப்படியானால், ஆபாசத்தைப் பார்ப்பதும்கூட தகாதது தானே? அசிங்கமான இன்றைய ஆபாசப் படங்களில் பாலுறவுக் காட்சிகளும் ஓரினப்புணர்ச்சிக் காட்சிகளும் அப்பட்டமாகக் காட்டப்படுகின்றன. அந்த அசிங்கமான காட்சிகளைப் பார்ப்பது ஆபாசக் கேலிப் பேச்சுகளைவிட மிகமிக மோசமானது, கடவுளுடைய கண்களில் அருவருப்பானது!

ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவார்கள் என்ற கருத்து ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. ஆனால், ஆபாசத்தைப் பார்ப்பதே கடவுளுக்குச் சுத்தமாகப் பிடிக்காது என்றும், கடவுளோடுள்ள நம் பந்தத்தை முற்றிலும் முறித்துவிடும் என்றும் பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அதனால்தான் அது இவ்வாறு அறிவுறுத்துகிறது: ‘பாலியல் முறைகேடு, காமப்பசி ஆகியவற்றைத் தூண்டுகிற உங்கள் உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்யுங்கள்.’ (கொலோசெயர் 3:5) ஆபாசத்தைப் பார்ப்பவர்கள் இந்த அறிவுரைக்கு நேர்மாறாகத்தான் செய்கிறார்கள். ஆம், அப்படிப்பட்ட காம ஆசைகளை மரத்துப்போகச் செய்வதற்குப் பதிலாக அவற்றை இன்னும் கொழுந்துவிட்டு எரியச் செய்கிறார்கள்.

ஆபாசத்தைத் தவிர்க்க உங்களுக்கு எது உதவும்?

‘தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்.’—ஆமோஸ் 5:14, 15.

பைபிளின் கருத்து

ஒரு காலத்தில் ஒழுக்கங்கெட்டவர்களாகவும், குடிகாரர்களாகவும், திருடர்களாகவும் இருந்த ஆட்கள் தங்களுடைய மோசமான நடத்தையை விட்டொழித்ததாக பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9-11) அவர்களால் எப்படி விட்டொழிக்க முடிந்தது? கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஞானமான ஆலோசனைகளைக் கடைப்பிடித்ததன் மூலம் தீமையை வெறுக்க அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தின் பயங்கரமான பின்விளைவுகளைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பார்த்தால், அதை அறவே வெறுக்கக் கற்றுக்கொள்வோம். உடா ஸ்டேட் யூனிவர்சிட்டி சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஆபாசத்தைப் பார்ப்பது சிலரை “மனச்சோர்வில் ஆழ்த்துகிறது, சமுதாயத்தைவிட்டு விலகச் செய்கிறது, பிறருடன் உள்ள நல்லுறவைக் கெடுக்கிறது,” அதோடு வேறுபல பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. அதுமட்டுமா, ஆபாசத்தைப் பார்ப்பது கடவுளுடைய கண்களில் ரொம்பவே அருவருப்பானதாக இருக்கிறது. அதைவிட மோசம், படைப்பாளரிடமிருந்தே மனிதர்களைப் பிரித்துவிடுகிறது.

நன்மையை நேசிக்க பைபிள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பைபிளை எந்தளவுக்கு வாசிக்கிறோமோ அந்தளவுக்கு அதிலுள்ள ஒழுக்கநெறிகளின்படி நடக்க ஆசைப்படுவோம். ஆபாசம் எனும் ஆபத்திலிருந்து முற்றிலும் விலகியிருப்போம், அதோடு “தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்க மாட்டேன்” என்று எழுதிய சங்கீதக்காரனைப் போல் தீர்மானமாய் இருப்போம்.—சங்கீதம் 101:3. ◼ (g13-E 03)