Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் கருத்து

திருமணத்திற்குமுன் உடலுறவு

திருமணத்திற்குமுன் உடலுறவு

திருமணத்திற்குமுன் உடலுறவு தவறா?

“நீங்கள் பரிசுத்தமானவர்களாக வேண்டும் என்பது கடவுளுடைய சித்தம்; ஆகவே, நீங்கள் பாலியல் முறைகேட்டிற்கு விலகியிருக்க வேண்டும்.”—1 தெசலோனிக்கேயர் 4:3.

மக்கள் என்ன சொல்கிறார்கள்

மணமாகாத இருவர் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்வது சில கலாச்சாரங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மணமாகாத பருவ வயதினர் ஏதோவொரு விதத்தில் பாலியல் நெருக்கத்தை அனுபவிப்பது சில இடங்களில் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பைபிள் என்ன சொல்கிறது

மணமாகாதவர்கள் ஏதோவொரு விதமான பாலியல் பழக்கத்தில் ஈடுபடுவதை விவரிக்க “பாலியல் முறைகேடு” என்ற சொற்றொடரை பைபிள் பயன்படுத்துகிறது. தம்முடைய வணக்கத்தார் “பாலியல் முறைகேட்டிற்கு விலகியிருக்க வேண்டும்” எனக் கடவுள் எதிர்பார்க்கிறார். (1 தெசலோனிக்கேயர் 4:3) மணத்துணைக்குத் துரோகம், ஆவியுலகத் தொடர்பு, குடிவெறி, உருவ வழிபாடு, கொலை, கொள்ளை போன்ற பயங்கரமான பாவங்களோடு சேர்த்து பாலியல் முறைகேடு பைபிளில் பட்டியலிடப்பட்டுள்ளது.—1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8.

தவிர்ப்பது ஏன் முக்கியம்

ஒரு காரணம், “பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களை . . . கடவுள் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) அதைவிட முக்கியக் காரணம், பைபிளிலுள்ள ஒழுக்க நெறிகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் யெகோவா தேவன்மீது நமக்கு அன்பு இருப்பதைக் காட்டுவோம். (1 யோவான் 5:3) அப்படிக் கீழ்ப்படிகிறவர்களை அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.—ஏசாயா 48:18.

மணமாகாதவர்கள் பாலியல் நெருக்கத்தை எவ்விதத்திலும் அனுபவிக்கக் கூடாதா?

“பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்கூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.”—எபேசியர் 5:3.

மக்கள் என்ன சொல்கிறார்கள்

மணமாகாத இருவர் உடலுறவு மட்டும் கொள்ளாமல், வேறு விதங்களில் பாலியல் நெருக்கத்தை அனுபவிப்பது தவறில்லை என்று அநேகர் நினைக்கிறார்கள்.

பைபிள் என்ன சொல்கிறது

பைபிள், ஒழுக்கக்கேடான பாலியல் பழக்கங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, “பாலியல் முறைகேடு” என்ற சொற்றொடரை மட்டுமல்ல, “அசுத்தமான நடத்தை,” “வெட்கங்கெட்ட நடத்தை” ஆகிய சொற்றொடர்களையும் பயன்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 12:21) அப்படியானால், மணமாகாதவர்கள் உடலுறவு கொள்ளாவிட்டாலும், வேறு விதங்களில் பாலியல் நெருக்கத்தை அனுபவிப்பதுகூட கடவுளுக்கு அருவருப்பானது என்பது தெளிவாய்த் தெரிகிறது.

ஆக, தம்பதிகள் மட்டுமே தங்களுக்குள் பாலியல் நெருக்கத்தை அனுபவிக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. அதோடு, “கட்டுக்கடங்கா காமப்பசிக்கு இடங்கொடுப்பதை” அது கண்டனம் செய்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:4) இந்தச் சொற்றொடரின் அர்த்தம் என்ன? ஆண், பெண் இருவருக்குமே பொருந்துகிற ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு பெண் தன் காதலனோடு உடலுறவு கொள்ளக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருக்கிறாள். ஆனாலும், வேறு விதங்களில் பாலியல் நெருக்கத்தை அவர்கள் அனுபவிக்கிறார்கள். இப்படி நடந்துகொள்ளும்போது, தங்களுக்கு உரிமையில்லாத ஒன்றில் கட்டுக்கடங்காமல் ஈடுபடுகிறார்கள். இவ்வாறு, ‘கட்டுக்கடங்கா காமப்பசிக்கு இடங்கொடுத்து’ பாவம் செய்துவிடுகிறார்கள். இத்தகைய வெட்கங்கெட்ட நடத்தையை பைபிள் கண்டனம் செய்கிறது.—எபேசியர் 5:3-5.

பாலியல் ஒழுக்கக்கேட்டை எவ்வாறு தவிர்ப்பது?

“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்.”—1 கொரிந்தியர் 6:18.

தவிர்ப்பது ஏன் முக்கியம்

பைபிள் சொல்கிறபடி, திருமணத்திற்குமுன் பாலியல் பழக்கத்தில் ஈடுபடுகிறவர்கள் கடவுளுடைய நட்பை இழந்துவிடுவார்கள்.—கொலோசெயர் 3:5, 6.

பைபிள் என்ன சொல்கிறது

“பாலியல் முறைகேட்டிற்கு விலகி ஓடுங்கள்” என்று பைபிள் நம்மை அறிவுறுத்துகிறது. (1 கொரிந்தியர் 6:18) இதற்கு என்ன அர்த்தம்? பாலியல் ஒழுக்கக்கேடு எனும் கண்ணியில் சிக்க வைக்கக்கூடிய எந்தவொரு காரியத்திலிருந்தும் ஒருவர் தூர விலகியிருக்க வேண்டுமென்று அர்த்தம். (நீதிமொழிகள் 22:3) உதாரணத்திற்கு, பாலியல் பற்றிய கடவுளுடைய நெறிமுறைகளை அசட்டை செய்கிறவர்களோடு பழகாமல் இருந்தால்தான் நாம் ஒழுக்க சுத்தத்தைக் காத்துக்கொள்ள முடியும். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்று பைபிள் நம்மை எச்சரிக்கிறது.—நீதிமொழிகள் 13:20.

நம் மனதை ஒழுக்கங்கெட்ட எண்ணங்களால் நிரப்பினோம் என்றால், அசுத்தமான நடத்தையில் ஈடுபட்டுவிடுவோம். (ரோமர் 8:5, 6) எனவே, பாலியலைத் தவறான கோணங்களில் காட்டுகிற அல்லது கடவுளுக்குக் கோபமூட்டுகிற பாலியல் பழக்கங்களைப் பிரபலப்படுத்துகிற இசை, வீடியோ, பத்திரிகை, புத்தகம் போன்றவற்றை அறவே தவிர்ப்பது ஞானமாகும்.—சங்கீதம் 101:3. ◼ (g13-E 09)