Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | கணவன்-மனைவிக்காக...

மாமியார்-மாமனாரோடு சமாதானமாக இருக்க...

மாமியார்-மாமனாரோடு சமாதானமாக இருக்க...

இது ஏன் கஷ்டம்?

“எனக்கும் என் மனைவிக்கும் பிரச்சினை வந்தப்போ, என் மனைவி அவங்க அப்பா-அம்மாகிட்ட அதை சொல்லிட்டாங்க. உடனே என் மாமனார் என்னை கூப்பிட்டு எனக்கு புத்திமதி சொன்னார். அது எனக்கு ரொம்ப எரிச்சலா இருந்துச்சு.”—ஜேம்ஸ். *

“‘என் பையன் இல்லாம எங்க வீடே வெறிச்சோடிக் கிடக்கு’னு சொல்லி என் மாமியார் அடிக்கடி என்கிட்ட வருத்தப்படுவாங்க. அதுமட்டுமில்ல, அவங்க மேல என் கணவர் எவ்வளவு பாசமா இருந்தார்னு எப்பவும் சொல்லிட்டு இருப்பாங்க. அதை கேட்குறப்போ, என்னாலதான் என் மாமியார் இவ்வளவு கஷ்டப்படுறாங்களோனு நினைச்சு நான் ரொம்ப கவலைப்பட்டேன்.”—ப்ரியா.

இந்த மாதிரி சூழ்நிலை உங்களுக்கும் வந்திருக்கலாம். மாமனார்-மாமியாரால உங்களுக்கும் உங்க கணவனுக்கும் (மனைவிக்கும்) பிரச்சினை வராம எப்படி பார்த்துக்கலாம்?

சில உண்மைகள்

கல்யாணம் ஆனதும் தனி குடும்பமா ஆயிடுறோம். கல்யாணமான ஒருத்தர், ‘தகப்பனையும் தாயையும் விட்டு மனைவியோடு சேர்ந்திருக்கணும்’னு பைபிள் சொல்லுது. இது பெண்களுக்கும் பொருந்தும். கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், கணவனும் மனைவியும் “ஒரே உடலா” இருப்பாங்கனும் பைபிள் சொல்லுது. அப்படினா, அவங்க ரெண்டு பேரும் இப்போ ஒரு தனி குடும்பம்னு அர்த்தம்.—மத்தேயு 19:5.

கணவனுக்குதான் (மனைவிக்குதான்) முதல் இடம் கொடுக்கணும். ஜான் எம். காட்மன் என்ற திருமண ஆலோசகர் இப்படி சொல்றார்: “உங்க திருமண வாழ்க்கையில நீங்க முக்கியமா செய்ய வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க எதை செஞ்சாலும் ‘நான்,’ ‘எனக்கு’னு யோசிக்காம, ‘நாம்,’ ‘நமக்கு’னு யோசிக்கணும். நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கணும்னா உங்களுக்கு இடையில உங்க அப்பா-அம்மாவோ, உங்க கூட பிறந்தவங்களோ தலையிடாம பார்த்துக்கணும்.” * (அடிக்குறிப்பை பாருங்க.)

சில அப்பா-அம்மாவுக்கு எதார்த்தத்தை ஏத்துக்கிறது கஷ்டமா இருக்கும். ஒரு கணவர் சொல்றார், “கல்யாணத்துக்கு முன்னாடி என் மனைவிக்கு எல்லாமே அவங்க அப்பா-அம்மாதான். ஆனா, கல்யாணத்துக்கு அப்புறம் அந்த இடத்துக்கு நான் வந்துட்டதை என் மாமியாரால ஜீரணிக்கவே முடியல.”

கல்யாணமான புதுசுல சிலருக்கு மாமனார்-மாமியாரோட ஒத்துப்போறது கஷ்டமா இருக்கும். ஆரம்பத்தில பார்த்த ஜேம்ஸ் என்ன சொல்றார்னு பாருங்க: “நண்பர்களை பிடிக்கலனா மாத்திக்கலாம். ஆனா, மாமனார்-மாமியாரை பிடிக்கலனா மாத்திக்க முடியாது. நமக்கு பிடிச்சாலும் சரி பிடிக்கலனாலும் சரி அவங்களை ஏத்துக்கதான் வேணும். என்னதான் எரிச்சல் வர்ற மாதிரி அவங்க நடந்துகிட்டாலும், அவங்களும் நம்ம குடும்பத்தில ஒருத்தர்தான்!”

என்ன செய்யணும்?

மாமனார்-மாமியார் விஷயத்தில உங்களுக்கும் உங்க கணவருக்கும் (மனைவிக்கும்) பிரச்சினை வந்தா, ரெண்டு பேரும் சேர்ந்து அதை சரிசெய்யுங்க. “சமாதானத்திற்காகப் பாடுபடு. அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்”னு பைபிள் சொல்லுது.—சங்கீதம் 34:14, ஈஸி டு ரீட் வர்ஷன்.

எப்படி முயற்சி செய்யலாம்னு இப்போ பார்க்கலாம். கீழே சொல்லியிருக்கிற விஷயங்கள், கணவனை பார்த்து மனைவி சொல்ற மாதிரியும், மனைவியை பார்த்து கணவன் சொல்ற மாதிரியும் இருக்கு. இருந்தாலும், இது ரெண்டு பேருக்கும் பொருந்தும். கீழே கொடுத்திருக்கிற பைபிள் அறிவுரைகளை கேட்டு நடந்தா பிரச்சினைகளை சுலபமா சமாளிக்கலாம்.

 

இப்படி செஞ்சு பாருங்க: உங்க கணவர்கிட்ட இதை பத்தி பேசுங்க, விட்டுக்கொடுக்க தயாரா இருங்க. உங்க மாமியாரை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க அப்படிங்கிறது இப்போ முக்கியமில்லை. உங்க கணவரை சந்தோஷப்படுத்துறதுதான் இப்போ முக்கியம். ஏன்னா, காலம் முழுக்க அவர் மேல அன்பு காட்டுவேன்னு நீங்க வாக்கு கொடுத்திருக்கீங்க. அதனால இந்த பிரச்சினையை எப்படி சரி பண்ணலாம்னு நீங்களும் அவரும் உட்கார்ந்து பேசுங்க. உங்க மாமியார்கிட்ட சமாதானமா போறதுக்கு ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிங்க; அதன்படி நடந்துக்க முயற்சி பண்ணுங்க. நீங்க இப்படி செய்றதை பார்க்கும்போது உங்க கணவருக்கு உங்க மேல இருக்கிற பாசம் அதிகமாகும்.—பைபிள் அறிவுரை: 1 கொரிந்தியர் 10:24.

“என்னைவிட உங்க அப்பா-அம்மாதான் உங்களுக்கு முக்கியம்”னு உங்க மனைவி சொல்றாங்க.

இப்படி செஞ்சு பாருங்க: இதை பத்தி உங்க மனைவிகிட்ட பேசுங்க. அவங்க ஏன் அப்படி சொல்றாங்கனு புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்க. உங்க அப்பா-அம்மாவுக்கு நீங்க மரியாதை கொடுக்குறதுல எந்த தப்பும் இல்லை. (நீதிமொழிகள் 23:22) ஆனா, ‘என் கணவருக்கு என்னைவிட அவரோட அப்பா-அம்மாதான் முக்கியம்’னு உங்க மனைவி நினைக்காத மாதிரி பார்த்துக்கங்க. உங்க மனைவிதான் உங்களுக்கு முக்கியம்னு உங்க பேச்சிலயும் நீங்க நடந்துகிற விதத்திலயும் காட்டுங்க. அப்படி செஞ்சா, உங்க அப்பா-அம்மா மேல நீங்க காட்டுற அன்பை உங்க மனைவி தப்பா நினைக்க மாட்டாங்க.—பைபிள் அறிவுரை: எபேசியர் 5:33.

 

இப்படி செஞ்சு பாருங்க: இந்த பிரச்சினையை பத்தி உங்க மனைவிகிட்ட பேசுங்க. அவங்க அப்பா-அம்மாகிட்ட எதை பத்தியுமே கேட்கக் கூடாதுனு சொல்றது நியாயமா இருக்காது. அவங்ககிட்ட எதை கேட்கலாம், எதை கேட்க வேண்டாம்னு நீங்க ரெண்டு பேருமா பேசி முடிவு பண்ணுங்க. இப்படி செஞ்சா, பிரச்சினை வராம பார்த்துக்கலாம்.—பைபிள் அறிவுரை: பிலிப்பியர் 4:5. ▪ (g15-E 03)

^ பாரா. 4 பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

^ பாரா. 9 தி செவன் ப்ரின்சிபில்ஸ் ஃபார் மேக்கிங் மேரேஜ் ஒர்க் என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.