பாடம் 3
பைபிளில் இருக்கும் சந்தோஷமான செய்தியை கடவுள்தான் சொன்னாரா?
1. பைபிளை எழுதியது யார்?
மனிதர்கள் சாவே இல்லாமல் இந்தப் பூமியில் என்றென்றும் வாழப்போகிறார்கள். இந்த சந்தோஷமான செய்தி பைபிளில் இருக்கிறது. (சங்கீதம் 37:29) பைபிளில் மொத்தம் 66 சின்னச் சின்ன புத்தகங்கள் இருக்கின்றன. அதை சுமார் 40 பேர் எழுதினார்கள். முதல் ஐந்து புத்தகங்களை மோசே எழுதினார். அதை கிட்டத்தட்ட 3,500 வருஷங்களுக்கு முன்பு எழுதினார். கடைசி புத்தகத்தை யோவான் எழுதினார். அதை கிட்டத்தட்ட 1,900 வருஷங்களுக்கு முன்பு எழுதினார். அந்த 40 பேரும் தங்களுடைய இஷ்டத்திற்கு எதையாவது எழுதினார்களா? இல்லை. யெகோவா சொன்னதை அவருடைய சக்தியின் உதவியோடு எழுதினார்கள். (2 சாமுவேல் 23:2) அதனால்தான் பைபிளை யெகோவா கொடுத்த புத்தகம் என்று சொல்கிறோம்.—2 தீமோத்தேயு 3:16-ஐயும் 2 பேதுரு 1:20, 21-ஐயும் வாசியுங்கள்.
பைபிளின் நூலாசிரியர் யார்? என்ற வீடியோவைப் பாருங்கள்.
2. பைபிளில் இருக்கும் விஷயங்கள் உண்மை என்று எப்படி சொல்லலாம்?
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பைபிளில் யெகோவா தெளிவாக சொல்லியிருக்கிறார். ஆனால், மனிதர்களால் அப்படி சொல்ல முடியாது. (யோசுவா 23:14) கடவுளுக்கு எல்லா சக்தியும் இருப்பதால், எதிர்காலத்தைப் பற்றி அவரால் மட்டும்தான் சரியாக சொல்ல முடியும்.—ஏசாயா 42:9; 46:10-ஐ வாசியுங்கள்.
கடவுள் தந்த புத்தகம் மற்ற புத்தகங்களைவிட சிறந்த புத்தகமாக இருக்க வேண்டும், இல்லையா? பைபிள் உண்மையிலேயே ஒரு சிறந்த புத்தகம்தான். பைபிள் இன்று நிறைய மொழிகளில் கிடைக்கிறது. இதுவரை கோடிக்கணக்கில் அச்சிடப்பட்டிருக்கிறது. பைபிளில் சொல்லியிருக்கிற விஷயங்கள் அறிவியலோடு ஒத்துப்போகிறது. அதோடு, 40 பேர் பைபிளை எழுதியிருந்தாலும் அவர்கள் சொன்ன எதுவுமே முன்னுக்குப்பின் முரணாக இல்லை, எல்லாமே ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகிறது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதுமட்டுமல்ல, பைபிளைப் படிக்கும்போது கடவுளுக்கு நம் மேல் எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும். அப்படி தெரிந்துகொண்ட நிறையப் பேர் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ஆளையே மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் பைபிளை கடவுள் தந்த புத்தகம் என்று லட்சக்கணக்கான பேர் நம்புகிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:13-ஐ வாசியுங்கள்.
பைபிளை நம்பலாமா? என்ற வீடியோவைப் பாருங்கள்.
3. பைபிள் எதைப் பற்றி சொல்கிறது?
நம் எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கடவுள் தரப்போகிறார் என்ற விஷயத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. கடவுள் ஒரு ஆணையும் பெண்ணையும் படைத்து அவர்களை அழகான தோட்டத்தில் குடிவைத்தார். அந்த சந்தோஷமான வாழ்க்கையை அவர்கள் இழந்துவிட்டார்கள். ஆனால், அந்த வாழ்க்கையை மறுபடியும் கடவுள் நமக்கு தரப்போகிறார் என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 21:4, 5-ஐ வாசியுங்கள்.
நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு தேவையான ஆலோசனைகளும் சட்டங்களும் பைபிளில் இருக்கின்றன. ஜனங்களிடம் கடவுள் எப்படியெல்லாம் நடந்துகொண்டார் என்பதைப் பற்றியும் பைபிளில் இருக்கிறது. இதையெல்லாம் படிக்கும்போது கடவுள் எப்படிப்பட்டவர் என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். அவருடைய நண்பராக ஆவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் தெரிந்துகொள்வீர்கள்.—சங்கீதம் 19:7, 11-ஐயும் யாக்கோபு 2:23; 4:8-ஐயும் வாசியுங்கள்.
4. பைபிளை புரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
இயேசு ஜனங்களுக்கு சொல்லிக்கொடுத்தபோது வசனங்களை மட்டும் சொல்லவில்லை, அதன் ‘அர்த்தத்தையும்’ சொன்னார். அதேபோல், பைபிளில் இருக்கும் விஷயங்களை நன்றாகப் புரிந்துகொள்ள இந்த புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும்.—லூக்கா 24:27, 45-ஐ வாசியுங்கள்.
பைபிளில் இருக்கும் செய்திதான் நம் வாழ்க்கைக்கு சந்தோஷத்தை தரும். ஆனால், சிலர் அந்த செய்தியை கேட்பது இல்லை, சிலர் அதை கேட்டு கோபப்படுகிறார்கள். யார் என்ன நினைத்தாலும் சரி நீங்கள் பைபிள் படிப்பதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டால் மட்டும்தான் நீங்கள் என்றென்றும் சந்தோஷமாக வாழ முடியும்.—யோவான் 17:3-ஐ வாசியுங்கள்.
^ பாரா. 3 எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற புத்தகத்தை பாருங்கள்.