பேட்டி | ஆன்டோனியோ டெல்லா கட்டா
ஒரு பாதிரி ஏன் சர்ச்சைவிட்டு விலகினார்?
ஒன்பது வருஷங்கள் ரோமில் படித்ததற்குப் பிறகு ஆன்டோனியோ டெல்லா கட்டா 1969-ல் ஒரு பாதிரியாராக ஆனார். பிறகு, இத்தாலியில் நேபிள்ஸ் என்ற இடத்துக்குப் பக்கத்திலிருந்த செமினரியின் தலைவராக ஆனார். அங்கிருந்த சமயத்தில் நிறைய படித்தார்; நிறைய விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்த்தார். அப்போது, கத்தோலிக்க மதம் பைபிள் சொல்வதுபோல் செய்வதில்லை என்பதைப் புரிந்துகொண்டார். உண்மையான கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர் எடுத்த முயற்சிகளைப் பற்றி விழித்தெழு! பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தார்.
நீங்கள் எங்கே பிறந்தீர்கள், உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
1943-ல் இத்தாலியில் நான் பிறந்தேன். ஒரு சின்ன கிராமத்தில் நாங்கள் வாழ்தோம். என் அப்பா ஒரு விவசாயி, தச்சு வேலையும் செய்தார். எனக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, ஒரு தம்பி, இரண்டு தங்கைகள் இருந்தார்கள். நாங்கள் குடும்பமாக கத்தோலிக்க மதத்தில் இருந்தோம்.
நீங்கள் ஏன் பாதிரியாராக ஆக நினைத்தீர்கள்?
நான் சின்ன வயதில் இருந்தபோது சர்ச்சில் இருக்கிற பாதிரியார் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய தொனி, குரல் எல்லாம் கேட்கவே ரொம்ப நன்றாக இருக்கும். அதுமட்டுமல்ல, அங்கு நிறைய சடங்கு சம்பிரதாயங்களைச் செய்வார்கள். அதெல்லாம் பார்ப்பதற்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். இதையெல்லாம் பார்த்து நானும் ஒரு பாதிரியாராகத்தான் ஆகவேண்டும் என்று நினைத்தேன். எனக்கு 13 வயது இருந்தபோது என் அம்மா என்னை ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். அங்கே பிள்ளைகள் தங்கி படித்தார்கள். எதிர்காலத்தில் பாதிரியார் ஆவதற்கான மேற்படிப்புகளைப் படிப்பதற்கு அந்தப் பள்ளியில் பயிற்சி கொடுத்தார்கள்.
அந்தச் சமயத்தில் பைபிளைப் பற்றிப் படித்தீர்களா?
இல்லை! எனக்கு 15 வயது இருந்தபோது என்னுடைய ஆசிரியர் ஒருவர் சுவிசேஷ புத்தகத்தை, அதாவது இயேசுவுடைய வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிச் சொல்கிற புத்தகத்தை, கொடுத்தார். அதை நான் நிறைய தடவைப் படித்தேன். எனக்கு 18 வயது இருந்தபோது நான் ரோமுக்குப் போனேன். அங்கே போப்புக்குக் கீழே செயல்படுகிற பல்கலைக்கழகங்களில் படித்தேன். லத்தீன் மொழி, கிரேக்க மொழி, வரலாறு, தத்துவம், மனோதத்துவம், இறையியல் ஆகியவற்றைப் படித்தேன். பைபிள் வசனங்களை நாங்கள் மனப்பாடம் செய்தோம். ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தில் பைபிள் வாசிப்பதையும் கேட்டோம். இருந்தாலும், நாங்கள் பைபிளை ஆழமாகப் படிக்கவே இல்லை.
செமினரி தலைவராக இருந்தீர்களே, மாணவர்களுக்குப் பாடம் எடுத்தீர்களா?
முக்கியமாக, நான் நிர்வாக வேலைகளைத்தான் செய்தேன். ஆனால், இரண்டாம் வாடிக்கன் பொதுச்சங்கத்தில் [Second Vatican Council] எடுத்த முடிவுகளைப் பற்றி வகுப்புகள் எடுத்திருக்கிறேன்.
சர்ச்சின் மேல் இருக்கிற நம்பிக்கை உங்களுக்கு ஏன் குறைந்தது?
மூன்று விஷயங்கள் என் மனதை உறுத்தியது. ஒன்று, சர்ச்சில் இருந்தவர்கள் அரசியல் விஷயங்களில் ஈடுபட்டார்கள். இரண்டாவது, பாதிரியார்களும் சர்ச்சில் இருந்த மற்றவர்களும் தவறாக நடந்துகொள்ளும்போது யாருமே அதைக் கண்டிக்கவில்லை. அதோடு, கத்தோலிக்க மதத்தின் சில போதனைகளும் எனக்குச் சரியாகப் படவில்லை. உதாரணத்துக்கு, அன்பான கடவுள் ஒருவர் இறந்த பிறகும் அவரைத் தண்டிப்பதற்காக என்றென்றும் வதைத்துக்கொண்டே இருப்பாரா? அதோடு, ஜெப மாலையை உருட்டிகொண்டு ஒரே ஜெபத்தை நூற்றுக்கணக்கான தடவைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும் என்று கடவுள் உண்மையிலேயே எதிர்பார்ப்பாரா என்றும் யோசித்தேன். *
அப்போது என்ன செய்தீர்கள்?
‘கடவுளே, உதவி செய்ங்க’ என்று அழுது ஜெபம் பண்ணினேன். அதற்குப் பிறகு, கத்தோலிக்க ஜெருசலேம் பைபிள் ஒன்றை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அதை இத்தாலிய மொழியில் வெளியிட்டிருந்தார்கள். ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில், பிரசங்கத்தை எல்லாம் முடித்துவிட்டு என்னுடைய அங்கியை எடுத்து வைத்துக்கொண்டிருந்தேன். அப்போது இரண்டு பேர் எங்கள் செமினரிக்குள் வந்தார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று சொன்னார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேல் பைபிளைப் பற்றி என்னிடம் பேசினார்கள். உண்மையான மதத்தை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதையும் பைபிளிலிருந்து எடுத்துக்காட்டினார்கள்.
உங்களைப் பார்க்க வந்த சாட்சிகளிடம் உங்களுக்கு என்ன பிடித்திருந்தது?
அவர்கள் நம்பிக்கையோடு பேசினார்கள். கத்தோலிக்க பைபிளில் இருந்தே வசனங்களை ‘டக்கு டக்கு’ என எடுத்துக்காட்டினார்கள். அதற்குப் பிறகு, மரியோ என்ற ஒரு யெகோவாவின் சாட்சி என்னை வந்து சந்தித்தார். அவர் பொறுமைசாலி! மழையோ, வெயிலோ ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் சரியாக 9 மணிக்கு ‘டான்’ என்று வந்துவிடுவார்.
மற்ற பாதிரியார்கள் யெகோவாவின் சாட்சிகள் வருவதைப் பற்றி என்ன நினைத்தார்கள்?
சாட்சிகளோடு உட்கார்ந்து பைபிளைப் படிக்கும்போது, நான் அவர்களையும் கூப்பிடுவேன். ஆனால், அவர்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும், எனக்கு அந்தப் படிப்பு ரொம்ப பிடித்திருந்தது. கடவுள் ஏன் இன்னும் கஷ்டத்தை விட்டு வைத்திருக்கிறார் என்ற கேள்வி என் மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. இதுபோன்ற நிறைய கேள்விகளுக்கு எனக்கு பைபிளில் இருந்து பதில் கிடைத்தது.
உங்களுக்கு மேலிருந்த பாதிரிகள் நீங்கள் பைபிள் படித்ததைத் தடுத்தார்களா?
1975-ல், நிறைய தடவை ரோமுக்கு போய் அங்கே இருந்தவர்களிடம் நான் கற்றுக்கொண்டதை எல்லாம் எடுத்துச் சொன்னேன். ஆனால், அங்கே இருந்தவர்கள் என்னுடைய எண்ணத்தைத்தான் மாற்றப் பார்த்தார்கள். அவர்கள் பைபிளிலிருந்து எதையுமே எடுத்து சொல்லவில்லை. கடைசியாக ஜனவரி 9, 1976-ல் நான் இனிமேலும் ஒரு கத்தோலிக்கராக இருக்க விரும்பவில்லை என எழுதி ரோமுக்கு அனுப்பிவிட்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு, செமினரியிலிருந்து கிளம்பினேன். ஒரு ரயில் பிடித்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்துக்கு முதல்முறையாகப் போனேன். நிறைய சபைகளில் இருந்து யெகோவாவின் சாட்சிகள் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். அது ஒரு மாநாடு! அங்கே நடந்த விஷயங்கள் எனக்கு ரொம்பப் புதிதாக இருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் பைபிள் இருந்தது. பேச்சு கொடுத்த ஒவ்வொருவருமே ஒவ்வொரு தலைப்பில் பேசினார்கள். மாநாட்டுக்கு வந்திருந்த எல்லாருமே நன்றாகக் கவனித்தார்கள். பேச்சாளர்கள் வசனங்களைச் சொல்ல சொல்ல பைபிளை எடுத்துப் பார்த்தார்கள்.
நீங்கள் செய்த மாற்றத்தைப் பற்றிக் குடும்பத்தில் இருக்கிறவர்கள் என்ன நினைத்தார்கள்?
என் குடும்பத்தில் நிறைய பேர் என்னை ரொம்ப எதிர்த்தார்கள். ஆனால், என்னுடைய தம்பி யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்கிறான் என்பதைக் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு கேள்விப்பட்டேன். அவன் வடக்கு இத்தாலியில் லோம்பார்டி என்ற இடத்தில் இருந்தான். அவனைப் பார்ப்பதற்காக போனேன். அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகள் எனக்கு ரொம்ப உதவி செய்தார்கள். ஒரு வேலையையும் தங்குவதற்கு ஒரு இடத்தையும் தேடிக் கொடுத்தார்கள். பிறகு, அந்த வருஷமே நான் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனேன்.
இப்போது நான் கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தில் இருக்கிறேன்
யெகோவாவின் சாட்சியாக ஆனதை நினைத்து என்றாவது வருத்தப்பட்டிருக்கிறீர்களா?
இல்லவே இல்லை! இப்போது நான் கடவுளோடு ஒரு நல்ல பந்தத்தில் இருக்கிறேன். அதற்கு, பைபிளிலிருந்து தெரிந்துகொண்ட விஷயங்கள்தான் உதவின. தத்துவங்களும் சடங்கு சம்பிரதாயங்களும் அல்ல! இப்போது என்னால் மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் கற்றுக்கொடுக்க முடிகிறது.
^ பாரா. 13 இதுபோன்ற கேள்விகளுக்கு பைபிள் ரொம்ப திருப்தியான பதில்களைக் கொடுக்கிறது. . பைபிள் போதனைகள் > பைபிள் கேள்விகளுக்கான பதில்கள் என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.