பகுதி 6
யோபு உத்தமமாய் நடக்கிறார்
யோபுவின் உத்தமத்தைக் குறித்து கடவுளிடம் சாத்தான் கேள்வி எழுப்புகிறான். ஆனால், யோபு கடைசிவரை யெகோவாவுக்கு உண்மைத் தவறாமல் இருக்கிறார்
கடுமையான சோதனை வந்தாலும், கீழ்ப்படிவதால் எந்த ஆதாயமும் இல்லாவிட்டாலும், கடவுளுக்கு மனிதன் உண்மைத் தவறாமல் இருப்பானா? யோபு என்ற மனிதனை மையமாக வைத்து இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்குப் பதிலும் அளிக்கப்பட்டது.
இஸ்ரவேலர் இன்னும் எகிப்திலேயே இருந்த சமயம் அது. இன்று அரேபியா என அழைக்கப்படும் இடத்தில் ஆபிரகாமின் உறவினரான யோபு வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், விண்ணுலகில் தூதர்கள் கடவுளுடைய சன்னிதியில் கூடிவந்தார்கள்; கலகக்கார சாத்தானும் அங்கே வந்திருந்தான். விசுவாசமுள்ள தமது ஊழியனாகிய யோபுவைப் பற்றி தூதர்களின் முன்னிலையில் யெகோவா பெருமையாகப் பேசினார். சொல்லப்போனால், யோபுவைப் போன்ற உத்தமர் வேறு யாருமே இல்லை என்றார். ஆனால், கடவுள் ஆசீர்வதிப்பதால்தான் யோபு அவருக்குச் சேவை செய்கிறார் என்று சாத்தான் வாதாடினான். யோபுவிடம் உள்ள அனைத்தையும் பறித்துவிட்டால் கடவுளையே அவர் சபிப்பார் என்று சாத்தான் சவால்விட்டான்.
முதலாவதாக யோபுவின் செல்வத்தையும், அதன்பின் அவருடைய பிள்ளைகளையும், கடைசியில் அவருடைய ஆரோக்கியத்தையும் பறித்துக்கொள்ள சாத்தானுக்குக் கடவுள் அனுமதி அளித்தார். இதற்கெல்லாம் மூலகாரணம் சாத்தான்தான் என்று யோபுவுக்குத் தெரியாது. ஆகவே, இந்தச் சோதனைகளைக் கடவுள் ஏன் அனுமதித்தார் என்பதை யோபுவால் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தாலும், கடவுளை யோபு பழித்துப் பேசவில்லை.
போலி நண்பர்கள் மூன்று பேர் யோபுவிடம் வந்தார்கள். அவர்கள் மூவரும் மாறி மாறி பேசிய விஷயங்கள் யோபு புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம் இருக்கின்றன. யோபு இரகசியமாய்ச் செய்த பாவங்களுக்காகக் கடவுள் அவரைத் தண்டிப்பதாக அவர்கள் பொய்க் குற்றம் சாட்டினார்கள். கடவுள் தமது ஊழியர்களைக் குறித்து சந்தோஷப்படுவதும் இல்லை, அவர்களை நம்புவதும் இல்லை என்றுகூட சொன்னார்கள். அவர்களுடைய நியாயமற்ற வாதத்தை யோபு காதில் போட்டுக்கொள்ளவில்லை. ‘சாகும்வரை என் உத்தமத்தை கைவிட மாட்டேன்!’ என்று உறுதியாகச் சொன்னார்.
ஆனால், யோபு ஒரு தவறு செய்தார். தன்மீது எந்தக் குற்றமும் இல்லை என்பதை நிரூபிப்பதிலேயே குறியாய் இருந்தார். இதுவரை நடந்த விவாதத்தைக் கேட்டுக்கொண்டிருந்த எலிகூ என்ற இளைஞர் இப்போது பேச ஆரம்பித்தார். எந்தவொரு மனிதனும் தன்னை நிரபராதி என நிரூபிப்பதைவிட யெகோவா தேவனுடைய ஆட்சி நீதியானது என நிரூபிப்பதே மிக முக்கியம் என்பதை யோபுவுக்கு உணர்த்தினார். யோபுவின் “நண்பர்களையும்” கடுமையாகக் கண்டித்தார்.
பிறகு, யெகோவா தேவனே யோபுவிடம் பேசி, அவருடைய தப்பான அபிப்பிராயத்தைத் திருத்தினார். கடவுள் தமது அற்புதமான படைப்புகளை யோபுவுக்குச் சுட்டிக்காட்டி, மகா வல்லமை படைத்த தமக்கு முன்னால் யோபு ஒன்றுமே இல்லை என்பதை அவருக்கு உணர்த்தினார். கடவுள் தன்னைத் திருத்தியபோது யோபு தாழ்மையோடு அதை ஏற்றுக்கொண்டார். “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்” என்பதால் யோபுவை சுகப்படுத்தினார், அவருக்கு இரட்டிப்பான செல்வத்தையும், 10 பிள்ளைகளையும் கொடுத்து ஆசீர்வதித்தார். (யாக்கோபு 5:11) கடுமையான சோதனையிலும் கடவுளுக்கு மனிதன் உண்மைத் தவறாமல் இருப்பானா என்று சாத்தான் கேட்ட கேள்விக்கு யோபு பதிலடி கொடுத்தார். ஆம், சோதனையிலும் யெகோவாவுக்கு யோபு உத்தமமாய் நடந்தார்.
—ஆதாரம்: யோபு புத்தகம்.