லூக்கா எழுதியது 7:1-50
அடிக்குறிப்புகள்
ஆராய்ச்சிக் குறிப்புகள்
மீடியா
“அரண்மனைகளில்” (லூ 7:25) அல்லது “ராஜாக்களுடைய அரண்மனைகளில்” (மத் 11:8) வாழ்கிறவர்களைப் பற்றி இயேசு சொன்னபோது, மகா ஏரோது கட்டிய பல சொகுசான மாளிகைகள் மக்களின் ஞாபகத்துக்கு வந்திருக்கலாம். இங்கே போட்டோவில் காட்டப்பட்டிருப்பது, எரிகோவில் மகா ஏரோது கட்டிய குளிர் கால மாளிகையின் ஒரு பகுதியுடைய இடிபாடுகள். இந்தக் கட்டிடத்தில், தூண்கள் நிறைந்த ஒரு வரவேற்பு அறை இருந்தது. அதன் நீளம் 29 மீ. (95 அடி), அகலம் 19 மீ. (62 அடி). அதோடு, தூண்கள் நிறைந்த முற்றங்களும், அவற்றைச் சுற்றிலும் பல அறைகளும் இருந்தன. குளிர்சாதனங்கள் அல்லது வெப்பசாதனங்கள் கொண்ட பெரிய குளியல் அறையும் இருந்தது. படிகளைப் போன்ற அடுக்குகளைக் கொண்ட ஒரு தோட்டம் அந்த மாளிகையோடு இணைந்திருந்தது. யோவான் ஸ்நானகர் தன் ஊழியத்தை ஆரம்பிப்பதற்குச் சில பத்தாண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலகத்தில், அந்த மாளிகை தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், ஏரோதுவின் மகன் அர்கெலாயு அதை மறுபடியும் கட்டினான்.
இங்கே காட்டப்பட்டிருப்பதைப் போன்ற சில சந்தைகள் சாலையோரமாக அமைந்திருந்தன. வியாபாரிகள் தங்கள் விற்பனைப் பொருள்களைத் தெருவில் குவித்து வைத்ததால் போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்பட்டது. உள்ளூர்வாசிகளால் வீட்டு உபயோகப் பொருள்களையும், மண்பாண்டங்களையும், விலை உயர்ந்த கண்ணாடிப் பொருள்களையும் அங்கே வாங்க முடிந்தது. காய்கறிகள், பழங்கள் போன்ற உணவுப்பொருள்களும் அங்கே கிடைத்தன. அந்தக் காலத்தில் குளிர்சாதனப் பெட்டிகள் இல்லாததால், தேவையான பொருள்களை வாங்க மக்கள் தினமும் சந்தைக்குப் போக வேண்டியிருந்தது. அங்கே பொதுவாக, மற்ற ஊர் வியாபாரிகள் மூலமோ மற்ற ஊர் மக்கள் மூலமோ கடைக்காரர்கள் சில செய்திகளைத் தெரிந்துகொள்வார்கள்... பிள்ளைகள் விளையாடிக்கொண்டு இருப்பார்கள்... வேலை இல்லாதவர்கள் கூலி வேலைக்காகக் காத்துக்கொண்டு இருப்பார்கள். இதுபோன்ற சந்தையில் இயேசு நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார், அங்கே பவுலும் ஊழியம் செய்திருக்கிறார். (அப் 17:17) ஆனால், பெருமைபிடித்த வேத அறிஞர்களும் பரிசேயர்களும், இந்தப் பொது இடங்களில் மக்கள் தங்களைக் கவனிக்க வேண்டுமென்றும், தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும் ஆசைப்பட்டார்கள்.
பைபிள் காலங்களில், நாணலையோ மூங்கிலையோ வைத்து புல்லாங்குழல் செய்யப்பட்டது; எலும்பையோ தந்தத்தையோ வைத்துக்கூட அது செய்யப்பட்டது. இசைக்கருவிகளிலேயே புல்லாங்குழல்தான் மிகவும் பிரபலமாக இருந்தது. சந்தோஷமான சமயங்களில், உதாரணத்துக்கு விருந்துகளின்போதும் திருமண நிகழ்ச்சிகளின்போதும் புல்லாங்குழல் வாசிக்கப்பட்டது. (1ரா 1:40; ஏசா 5:12; 30:29) அதைப் பார்த்துதான் பிள்ளைகள் பொது இடங்களில் புல்லாங்குழல் ஊதி விளையாடினார்கள். சோகமான சமயங்களிலும் புல்லாங்குழல் வாசிக்கப்பட்டது. பொதுவாக, ஒப்பாரி வைக்கப்பட்டபோது சிலர் புல்லாங்குழலில் சோகமான ராகங்களை வாசித்தார்கள். இங்கே உள்படத்தில் காட்டப்பட்டிருப்பது புல்லாங்குழலின் ஒரு துண்டு; அது எருசலேமில் ஒரு கற்குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டது. எருசலேம் ஆலயத்தை ரோமர்கள் அழித்த காலப்பகுதியில் அது பயன்படுத்தப்பட்டது. அதன் நீளம் கிட்டத்தட்ட 15 செ.மீ. (6 அங்.) ஒரு பசுவின் முன்னங்கால் எலும்பு ஒன்றிலிருந்து அது செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
வாசனை எண்ணெயை ஊற்றி வைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட இந்தச் சிறிய ஜாடிகள், எகிப்திலுள்ள அலபாஸ்ட்ரான் என்ற இடத்துக்குப் பக்கத்தில் கிடைத்த கல்லால் செய்யப்பட்டன. அது ஒரு விதமான சுண்ணாம்புக் கல். பிற்பாடு அது அலபாஸ்ட்ரான் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. படத்தில் காட்டப்பட்டிருக்கும் குப்பி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. அது கி.மு. 150-க்கும் கி.பி. 100-க்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. அதைவிட விலை குறைந்த ஜிப்சம் போன்ற பொருள்கள், அதே விதமான குப்பிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டன. அவையும் வெண்சலவைக்கல் குப்பிகள் என்றே அழைக்கப்பட்டன. ஏனென்றால், அவையும் அதே காரணத்துக்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், விலை உயர்ந்த தைலங்களுக்கும் வாசனை எண்ணெய்களுக்கும் அசல் வெண்சலவைக்கல் குப்பிகள் பயன்படுத்தப்பட்டன. இரண்டு சந்தர்ப்பங்களில், அதாவது கலிலேயாவில் ஒரு பரிசேயரின் வீட்டிலும், பெத்தானியாவில் முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டிலும், அப்படிப்பட்ட அசல் குப்பிகளிலிருந்த எண்ணெய்தான் இயேசுவின் தலையில் ஊற்றப்பட்டது.