Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

A1

பைபிள் மொழிபெயர்ப்புக்கு உதவும் நியமங்கள்

பைபிள் முதன்முதலில் பழங்கால எபிரெய மொழியிலும், அரமேயிக் மொழியிலும், கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டது. பைபிள் இன்று 3,000-க்கும் அதிகமான மொழிகளில் முழுமையாகவோ பகுதியாகவோ கிடைக்கிறது. பைபிளைப் படிக்கும் பெரும்பாலான மக்களுக்கு அந்தப் பழங்கால மொழிகள் தெரியாது. அதனால், அவர்கள் ஏதாவது ஒரு மொழிபெயர்ப்பைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பைபிள் மொழிபெயர்ப்புக்கு எந்த நியமங்களைப் பின்பற்ற வேண்டும்? பரிசுத்த பைபிளின் புதிய உலக மொழிபெயர்ப்பில் அந்த நியமங்கள் எப்படிப் பின்பற்றப்பட்டிருக்கின்றன?

இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பைப் போல வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால்தான் பழங்கால மொழிகளில் இருப்பதை அப்படியே புரிந்துகொள்ள முடியும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அது எல்லா சமயங்களிலும் பொருந்தாது. அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்:

  • ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு விதமான இலக்கண விதிகளும் வார்த்தைகளும் வாக்கிய அமைப்புகளும் இருக்கின்றன. இதைப் பற்றி எபிரெய மொழியின் பேராசிரியர் எஸ். ஆர். டிரைவர் இப்படிச் சொல்கிறார்: “[மொழிகள்] இலக்கண விதிகளிலும் அவை உருவான விதங்களிலும் மட்டுமே மாறுபடுவதில்லை . . . கருத்துகளை வாக்கியங்களாக அமைக்கும் விதத்திலும் மாறுபடுகின்றன.” சொல்லப்போனால், மனிதர்கள் யோசிக்கும் விதம்கூட மொழிக்கு மொழி வேறுபடுகிறது. “அதனால்தான், வாக்கிய அமைப்பு எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை, அது மொழிக்கு மொழி வேறுபடுகிறது” என்று பேராசிரியர் டிரைவர் சொல்கிறார்.

  • முதன்முதலில் பைபிள் எழுதப்பட்ட மொழிகளின், அதாவது எபிரெயு, அரமேயிக் மற்றும் கிரேக்கு மொழிகளின், வார்த்தைகளும் இலக்கண விதிகளும் இன்றுள்ள எந்த மொழியோடும் அப்படியே ஒத்துப்போவதில்லை. அதனால், பைபிளை வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தால் தெளிவாக இருக்காது. சிலசமயங்களில், தவறான அர்த்தத்தைக்கூட கொடுத்துவிடலாம்.

  • ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரின் அர்த்தம், அதன் சூழமைவைப் பொறுத்து மாறுபடலாம்.

சிலசமயம், பழங்கால மொழிகளில் இருக்கும் வார்த்தைகளை ஒரு மொழிபெயர்ப்பாளரால் அப்படியே மொழிபெயர்க்க முடியும். ஆனால், அப்படிச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பது எப்படித் தவறான அர்த்தத்தைத் தந்துவிடலாம் என்பதற்குச் சில உதாரணங்கள்:

  • பைபிளில் ‘தூக்கம்’ என்ற வார்த்தை வெறுமனே தூக்கத்தைக் குறிப்பதற்கு மட்டுமல்லாமல் மரணத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (மத்தேயு 28:13; அப்போஸ்தலர் 7:60, அடிக்குறிப்பு) அப்படிப்பட்ட வசனங்களில் ‘தூங்கிவிட்டார்’ என்ற வார்த்தையை ‘இறந்துவிட்டார்’ என்று மொழிபெயர்ப்பது சரியாக இருக்கும். அப்போதுதான், இன்றைய வாசகர்களுக்கு எந்தக் குழப்பமும் வராது.—1 கொரிந்தியர் 7:39; 1 தெசலோனிக்கேயர் 4:13; 2 பேதுரு 3:4.

  • எபேசியர் 4:14-ல் அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்திய ஒரு சொற்றொடரை, “மனிதர்களுடைய பகடைக்காய் விளையாட்டு” என்று வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கலாம். இந்தப் பழங்கால மரபுத்தொடர், பகடைக்காய் விளையாட்டில் மற்றவர்களை ஏமாற்றும் பழக்கத்தைக் குறித்தது. இதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்த்தால், பெரும்பாலான மொழிகளில் சரியான அர்த்தத்தைக் கொடுக்காது. ஆனால், ‘மனிதர்களுடைய தந்திரம்’ என்று மொழிபெயர்க்கும்போது, அர்த்தம் தெளிவாகப் புரியும்.

  • ரோமர் 12:11-ல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு கிரேக்க சொற்றொடரின் நேரடி மொழிபெயர்ப்பு, ‘ஆவி கொதிக்கிறது’ என்பதாகும். இது தமிழில் சரியான அர்த்தத்தைக் கொடுக்காததால், “ஆர்வத்துடிப்போடு செயல்படுங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

  • மத்தேயு 5:3

    தமிழில் நேரடி மொழிபெயர்ப்பு: “ஆவியில் எளிமையுள்ளவர்கள்”

    அர்த்தம்: “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்”

    புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தில் இயேசு பயன்படுத்திய ஒரு சொற்றொடர், “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்றே பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படுகிறது. (மத்தேயு 5:3, தமிழ் O.V.) ஆனால், இது சரியான அர்த்தத்தைத் தருவதில்லை; ஏனென்றால், எளிமையாக இருப்பதைப் பற்றி இயேசு பேசவில்லை. ஒருவருடைய சந்தோஷம் எதைச் சார்ந்திருக்கிறது என்பதைத்தான் கற்றுக்கொடுத்தார். அதாவது, கடவுளுடைய வழிநடத்துதல் தேவை என்று உணர்வதால் மட்டுமே ஒருவருக்குச் சந்தோஷம் கிடைக்கும், உடல் தேவைகளைத் திருப்தி செய்வதால் அல்ல என்பதைத்தான் கற்றுக்கொடுத்தார். (லூக்கா 6:20) ஆகவே, பழங்கால மொழியில் சொல்லப்பட்ட இந்தக் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள்” என்றோ, “ஆன்மீகத் தேவையை உணர்ந்தவர்கள்” என்றோ மொழிபெயர்க்க வேண்டும்.—மத்தேயு 5:3.

  • நிறைய வசனங்களில், “பொறாமை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை, நெருக்கமானவர்கள் துரோகம் செய்ததாக நினைத்துக் கோபப்படுவதையோ மற்றவர்களுடைய வசதிகளைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுவதையோ குறிக்கிறது. (நீதிமொழிகள் 6:34; ஏசாயா 11:13) ஆனால், அதே எபிரெய வார்த்தை நல்ல குணங்களையும் குறிக்கிறது. உதாரணத்துக்கு, யெகோவா தன்னுடைய ஜனங்களைப் பாதுகாப்பதற்காகக் காட்டும் ‘வைராக்கியத்தை’ அல்லது தன்னுடைய ஜனங்களிடம் எதிர்பார்க்கிற “முழு பக்தியை” குறிக்கலாம். (யாத்திராகமம் 34:14; 2 ராஜாக்கள் 19:31; எசேக்கியேல் 5:13; சகரியா 8:2) அதுமட்டுமல்ல, உண்மையான ஊழியர்கள் கடவுளுக்காகவும் அவருடைய வணக்கத்துக்காகவும் காட்டுகிற ‘பக்திவைராக்கியத்தை’ குறிக்கலாம்; அவருக்குத் துரோகம் செய்கிறவர்களை அவர்கள் சகித்துக்கொள்ளாமல் இருப்பதையும் குறிக்கலாம்.—சங்கீதம் 69:9; 119:139; எண்ணாகமம் 25:11.

  • யாத் என்ற எபிரெய வார்த்தை பொதுவாக “கை” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், சூழமைவைப் பொறுத்து இந்த வார்த்தையை, ‘கட்டுப்பாடு,’ ‘தாராளம்,’ ‘அதிகாரம்’ என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்

    “கை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. சூழமைவைப் பொறுத்து இந்த வார்த்தையை, ‘கட்டுப்பாடு,’ ‘தாராளம்,’ ‘அதிகாரம்’ என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம். (2 சாமுவேல் 8:3; 1 ராஜாக்கள் 10:13; நீதிமொழிகள் 18:21) சொல்லப்போனால், ஆங்கில பரிசுத்த பைபிளின் புதிய உலக மொழிபெயர்ப்பில் இந்த வார்த்தை 40-க்கும் அதிகமான விதங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பைபிள் மொழிபெயர்ப்பைப் பற்றி ஒரு விஷயம் புரிகிறது; பழங்கால மொழிகளிலுள்ள வார்த்தைகளை எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி மொழிபெயர்ப்பது சரியாக இருக்காது. அதனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் பழங்கால மொழியிலுள்ள வார்த்தைகளின் கருத்துகளை அப்படியே சொல்வதற்குத் தன் மொழியில் சரியான வார்த்தைகளை விவேகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதோடு, படிப்பதற்குச் சுலபமாய் இருப்பதற்காகத் தன்னுடைய மொழியின் இலக்கண விதிகளைப் பின்பற்றி வாக்கியங்களை அமைக்க வேண்டும்.

அதேசமயத்தில், வார்த்தைகளை இஷ்டம்போல் மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். பைபிளிலுள்ள கருத்துகளை ஒரு மொழிபெயர்ப்பாளர் தன்னுடைய புரிந்துகொள்ளுதலுக்கு ஏற்றபடி சொந்த வார்த்தைகளில் தொகுத்து எழுதினால் அவற்றின் அர்த்தமே மாறிவிடலாம். எப்படி? அவர் மூலப் பதிவிலுள்ள கருத்துகளில் தன்னுடைய கருத்தைத் தவறுதலாகத் திணித்துவிடலாம் அல்லது மூலப் பதிவிலுள்ள முக்கியமான விவரங்களை விட்டுவிடலாம். ஒரு மொழிபெயர்ப்பாளர் சொந்த வார்த்தைகளில் பைபிளைத் தொகுத்து எழுதினால் படிக்கிறவர்களுக்கு அதைப் படிப்பது சுலபமாக இருக்கலாம்; ஆனால், மூலப் பதிவிலுள்ள உண்மையான கருத்து அவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடலாம்.

மொழிபெயர்ப்பாளர் நம்புகிற மத கோட்பாடுகள் அவருடைய மொழிபெயர்ப்பை எளிதில் பாதித்துவிடலாம். உதாரணத்துக்கு, “அழிவுக்குப் போகிற வாசல் அகலமானது” என்று மத்தேயு 7:13 சொல்கிறது. சில மொழிபெயர்ப்பாளர்கள், “அழிவு” என்ற வார்த்தைக்குப் பதிலாக “நரகம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் நம்புகிற மத கோட்பாட்டின் அடிப்படையில் இப்படிச் செய்திருக்கலாம்; ஆனால், கிரேக்க மொழியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையின் அர்த்தம் “அழிவு” என்பதுதான்.

விவசாயிகள், மேய்ப்பர்கள், மீனவர்கள் போன்ற சாதாரண ஜனங்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திய மொழியில்தான் பைபிள் எழுதப்பட்டது என்பதையும் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (நெகேமியா 8:8, 12; அப்போஸ்தலர் 4:13) ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு, எல்லா பின்னணிகளையும் சேர்ந்த நல்மனமுள்ள ஜனங்களுக்குச் சுலபமாகப் புரிந்தால், அதை நல்ல மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். சாதாரண ஜனங்கள் அடிக்கடி பயன்படுத்தாத வார்த்தைகளுக்குப் பதிலாக எல்லாருக்கும் தெரிந்த, எளிதில் புரிந்துகொள்ள முடிந்த, தெளிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது.

பழங்கால பைபிள் கையெழுத்துப் பிரதிகளில் யெகோவா என்ற கடவுளுடைய பெயர் காணப்பட்டாலும், நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் அதைப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டிருக்கிறார்கள்; இந்தத் துணிச்சலான செயலுக்கு எந்த நியாயமான காரணத்தையும் அவர்களால் கொடுக்க முடியாது. (இணைப்பு A4-ஐப் பார்க்கவும்.) கடவுளுடைய பெயருக்குப் பதிலாக “கர்த்தர்” என்ற வார்த்தையை நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் சில மொழிபெயர்ப்பாளர்கள், கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்ற உண்மையையே மறைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, சில மொழிபெயர்ப்புகள் யோவான் 17:26-ல், “உம்மை நான் அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்” என்றும், யோவான் 17:6-ல் “நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன்” என்றும் இயேசு ஜெபம் செய்ததாகச் சொல்கின்றன. ஆனால் இயேசுவின் ஜெபத்தைச் சரியாக மொழிபெயர்த்தால், “உம் பெயரை நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன்” என்றும், “நான் அவர்களுக்கு உம் பெயரை வெளிப்படுத்தினேன்” என்றும்தான் அங்கு வந்திருக்க வேண்டும்.

புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் முதல் ஆங்கிலப் பதிப்பின் முன்னுரையில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது: “வசனங்களை நாங்கள் சொந்த வார்த்தைகளில் தொகுத்து எழுதவில்லை. முடிந்தவரை எல்லா வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க முயற்சி செய்திருக்கிறோம்; முக்கியமாக, இன்றைய ஆங்கில மரபுத்தொடர்கள் அதே கருத்தைத் தரும்போதும், நேரடி மொழிபெயர்ப்பு கருத்தைக் குழப்பிவிடாமல் இருக்கும்போதும் அப்படிச் செய்திருக்கிறோம்.” இப்படி, புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழு, மூலப் பதிவில் இருக்கும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் அப்படியே மொழிபெயர்க்க முயற்சி செய்திருக்கிற அதேசமயத்தில், அர்த்தம் புரியாத விதத்திலோ வாசிக்க நெருடலாக இருக்கும் விதத்திலோ மொழிபெயர்க்காதபடி கவனமாக இருந்திருக்கிறது. அதனால், பைபிளைச் சுலபமாக வாசிக்க முடிகிறது. அதோடு, கடவுளுடைய வார்த்தை சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்ற முழு நம்பிக்கையோடு படிக்க முடிகிறது.—1 தெசலோனிக்கேயர் 2:13.